சினிமா

கம்பேக் கொடுத்த ரெட்ரோ- அகரம் அறக்கட்டளைக்கு ரூ.10 கோடி வழங்கிய சூர்யா

சூர்யா நடிப்பில் வெளியாகிய ரெட்ரோ திரைப்படம் 100-கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ள நிலையில், ரெட்ரோ திரைப்படம் ஈட்டிய லாபத்தில் ரூ.10 கோடியினை அகரம் அறக்கட்டளைக்கு வழங்கினார் சூர்யா.

கம்பேக் கொடுத்த ரெட்ரோ- அகரம் அறக்கட்டளைக்கு ரூ.10 கோடி வழங்கிய சூர்யா
suriya donates rs 10 crore to agaram foundation
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் பலத்த எதிர்ப்பார்புகளுக்கு மத்தியில் வெளியானது. சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படங்களில் இறுதியாக சிங்கம்-2 திரைப்படம் தான் வசூல் அளவில் வெற்றிப்படமாக அமைந்தது. சிங்கம்-2 திரைப்படம் வெளியானது 2013 ஆம் ஆண்டு.

அதன்பின் சூர்யாவிற்கு பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தது சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் படம் தான். ஆனால், இந்த இரண்டு திரைப்படங்களும் வெளியானது ஓடிடி தளங்களில் தான். 12 வருடங்களாக பெரிய திரையில் வெற்றிக்காக காத்திருக்கும் சூர்யாவிற்கு ரெட்ரோ திரைப்படம் கம்பேக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

5 நாளில் 100 கோடி வசூல்:

ரசிகர்கள் மத்தியில் ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும், வசூல் ரீதியில் திரையிட்ட அனைத்து இடங்களிலும் ரெட்ரோ திரைப்படம் நல்ல லாபத்தை ஈட்டியுள்ளது. படம் வெளியான 5-நாட்களில் ரூ.100-கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், திரைப்படத்தின் வெற்றிக்கு பங்காற்றிய திரைப்படக்குழுவினர் மற்றும் செய்தியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமானது சென்னையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் சூர்யா ரெட்ரோ திரைப்படம் ஈட்டிய லாபத்தில் அகரம் அறக்கட்டளைக்கு ரூ.10 கோடி வழங்கினார் நடிகர் சூர்யா.

அகரம் அறக்கட்டளையும்-நற்பணியும்:

அகரம் அறக்கட்டளையினை நடிகர் சூர்யா கடந்த 2026 ஆம் ஆண்டு, செப்டம்பர் 25 ஆம் தேதியன்று தொடங்கினார். ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தொடர்ந்து செயலாற்றி வந்த அகரம் அறக்கட்டளை 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ’அகரம் விதை’ என்கிற திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த, வறுமை கோட்டுக்கு கீழுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் முழுகல்விச்செலவையும் அகரம் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டு உதவியுள்ளது.

கடந்த 2024-ஆம் ஜுலை மாத நிலவரப்படி, அகரம் விதைத் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு வரையில் கிராமப்புற அரசுப் பள்ளியில் படித்த, 5,287 மாணவர்கள் 350-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை அமைத்து கொடுத்திருக்கிறது அகரம் அறக்கட்டளை. தற்போது சூர்யா 10 கோடி ரூபாயினை வழங்கியுள்ளதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Visit agaram foundation page

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், ஷ்ரேயா சரண் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள நிலையில் இப்படத்தினை சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.