சினிமா

தந்தை வழியில்.. இயக்குநராகும் பார்த்திபனின் மகன்

தனது மகன் ராக்கி பார்த்திபன், விரைவில் கமர்ஷியல் த்ரில்லர் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தந்தை வழியில்.. இயக்குநராகும் பார்த்திபனின் மகன்
parthiban and his son
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' திரைப்படம் பல விருதுகளை பெற்றது. அதனைத்தொடர்ந்து, 2022-ல் வெளியான 'இரவின் நிழல்' மற்றும் 2024-ல் வெளியான 'டீன்ஸ்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் அவர், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவரது மகள் கீர்த்தனா கடந்த 2002 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் மாதவன் - சிம்ரன் உள்ளிட்டோரின் மகளாக நடித்திருப்பார். இந்த படத்தில் அவரது 'அமுதா' என்ற கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த வரிசையில் தற்போது பார்த்திபனின் மகன் ராக்கி பார்த்திபன் இணைந்துள்ளார். இவர் சினிமாவில் பல்வேறு தளங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர், விரைவில் புதிய படத்தை இயக்கவுள்ளதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ராக்கி பார்த்திபன் ! என் மகன், என் உயிருக்கு நிகர். கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம், திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குநர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன்.

அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்" என்று தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இயக்குநராக அறிமுகமாக இருக்கும் ராக்கி பார்த்திபனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.