சினிமா

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’.. அமெரிக்காவிலிருந்து வீடியோ வெளியிட்ட மாரிசெல்வராஜ்!

”என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதே எனது இயக்குநர் ராம் சாரின் வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகள் எல்லாம் படமாக இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் பறந்து போ திரைப்படம்” என வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ்.

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’.. அமெரிக்காவிலிருந்து வீடியோ வெளியிட்ட மாரிசெல்வராஜ்!
Mari Selvaraj Shares Emotional Video abour paranthu po movie release
தமிழ் சினிமாவில் மிக குறைவான படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும், திரையுலக பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் தன் படைப்பின் மூலம் நன்மதிப்பை பெற்ற இயக்குநர் ராமின் அடுத்த படைப்பான “பறந்து போ” திரைப்படமானது இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த தருணத்தில் இயக்குநர் ராமுடன் தன்னால் இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என இயக்குநர் மாரிசெல்வராஜ் வீடியோ பதிவிட்டுள்ளார்.

'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற ஆழமான, உணர்வுபூர்வமான படைப்புகளின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் ராம். இந்நிலையில் அவரது அடுத்த படைப்பான 'பறந்து போ' திரைப்படம், அவரது முந்தைய பாணியிலிருந்து சற்று மாறுபட்டு, ஒரு இசை கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ளது.

இயக்குநர் ராம், மிர்ச்சி சிவாவுடன் இணைகிறார் என்ற அறிவிப்பு வந்த போதே கோலிவுட் திரையுலகம் ஆச்சரியமடைந்தது. 'பறந்து போ' திரைப்படம், 54-வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. பட வெளியீட்டிற்கு முன்னரே சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதால், பறந்து போ திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.



குடும்பத்தோடு போய் பாருங்க: மாரி செல்வராஜ்

இந்நிலையில் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநருமான மாரி செல்வராஜ் அமெரிக்காவிலிருந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ”எங்க டைரக்டரோட ’பறந்து போ’ திரைப்படம் இன்று ஜூலை 4 ஆம் தேதி திரையில் வெளியாகிறது. இந்த தருணத்தில் நான் சென்னையில் இல்லை. தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது அமெரிக்காவில் உள்ளேன். சாரின் எல்லா படங்களின் வெளியீட்டின் போது, நான் அவர் கூடத்தான் இருப்பேன். இன்று அப்படி இருக்க முடியவில்லை என்றாலும், கொஞ்சம் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். காரணம், படத்தை ப்ரீவ்யூ ஷோவில் பார்த்த அனைவரும் எனது இயக்குநரையும், படத்தையும் பற்றி புகழ்ந்து பேசியுள்ளனர். ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல படத்தை பார்த்தோம் என பலரும் போன் வாயிலாக கமெண்ட் தெரிவித்துள்ளார்கள்.

என்ன சொல்வது, என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதே எனது இயக்குநர் ராம் சாரின் வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகள் எல்லாம் படமாக இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் பறந்து போ. எல்லோரும் குடும்பத்துடன் சென்று திரைப்படத்தை பாருங்கள். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், தியா, ஜெஸ் ஸ்வீஜன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க, யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையைக் கையாள்கிறார். என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவையும், மதி வி.எஸ். படத்தொகுப்பையும், ஸ்டண்ட் சில்வா சண்டைப் பயிற்சியையும், குமார் கங்கப்பன் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படத்தை ஜியோசினிமா/டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரித்துள்ள நிலையில், 'ரோமியோ பிக்சர்ஸ்' நிறுவனம் தமிழ்நாட்டில் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ராமின் 'பறந்து போ' திரைப்படத்தினை தொடர்ந்து அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படமும் திரையில் வெளியீட்டிற்காக தயாராக உள்ளது.