சினிமா

TVK Vijay: விஜய் கணக்கு தப்பவில்லை... தமிழக வெற்றிக் கழகத்துக்கு கவிதை விளக்கேற்றிய வைரமுத்து!

விஜய்யின் கணக்கு தப்பாது என பாடலாசிரியர் வைரமுத்து போட்டுள்ள டிவிட்டர் பதிவு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TVK Vijay: விஜய் கணக்கு தப்பவில்லை... தமிழக வெற்றிக் கழகத்துக்கு கவிதை விளக்கேற்றிய வைரமுத்து!
விஜய் கணக்கு தப்பாது - வைரமுத்து

சென்னை: கோலிவுட் ரசிகர்களால் தளபதி என கொண்டாடப்படும் விஜய், சினிமாவில் இருந்து அரசியலில் களமிறங்குகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய விஜய், அதன் கொடி, பாடல் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து தவெக முதல் மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வரும் விஜய், தனது கடைசிப் படமான தளபதி 69-யிலும் நடித்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவதை திரை நட்சத்திங்கள் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யை தனது கவிதையால் உத்வேகப்படுத்தியுள்ளார் பாடலாசிரியர் வைரமுத்து. விஜய்யின் பல படங்களில் அவருக்காக பாடல் எழுதியுள்ள வைரமுத்து, இப்போது கவிதை மழை பொழிந்துள்ளார். அதன்படி,  

விஜய் நடித்த
ஷாஜகான் படத்துக்கு
எல்லாப் பாடல்களையும்
எழுதி முடித்தேன்

'மெல்லினமே'
'மின்னலைப் பிடித்து'
'அச்சச்சோ புன்னகை'
ஆகிய பாடல்கள்
இசை இலக்கியமாய்
அமைந்தது கண்டு
ஆனந்த ஊஞ்சலில் ஆடினேன்

ஓர் அதிகாலையில்
ஒருகால் காருக்குள்ளும்
மறுகால் தரையிலும்
இருந்த பரபரப்பில்
அந்தப் படத்தின் இயக்குநர்
ரவி ஓடிவந்தார்

'படத்துக்கு இன்னொரு
பாட்டு வேண்டும்' என்றார்

'எல்லாப் பாட்டும்
முடிந்து விட்டதே;
இனி என்ன பாட்டு' என்றேன்

'எல்லாப் பாட்டும்
நல்ல பாட்டாகவே
இருக்கு கவிஞரே;
ஒரே ஒரு குத்துப்பாட்டு
வேண்டும்' என்றார்

(கூத்துப் பாட்டு என்பதுதான்
மொழிச் சோம்பேறிகளால்
குத்துப் பாட்டு என்றாகிவிட்டது)

தயங்கினேன்

'விஜய் சொல்லி
அனுப்பினார்' என்றார்

கதாநாயகன் சொன்னபிறகு
மறுக்க முடியவில்லை;
எழுதிக் கொடுத்தேன்

அரங்கம் சென்று பார்த்தால்
இலக்கியப் பாடல்களுக்கு
மெளனமாய் இருந்த கொட்டகை
கூத்துப் பாடலுக்குக் குலுங்கியது

விஜய் கணக்கு
தப்பவில்லை

இசைஇலக்கியம்
இன்புறுவதற்கு;
கூத்துப் பாட்டு
கொண்டாடுவதற்கு

அந்தப் பாட்டு
எந்தப் பாட்டு தெரியுமா?

'சரக்கு வச்சிருக்கேன்
இறக்கி வச்சிருக்கேன்
கறுத்த கோழி மிளகுபோட்டு
வறுத்து வச்சிருக்கேன்' - என தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் வைரமுத்து.

          

இதில் விஜய் கணக்கு தப்பவில்லை என்பது, அவரது அரசியல் பயணம் குறித்து மறைமுகமாக குறிப்பிட்டுள்ளாரா வைரமுத்து என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். திமுகவை தீவிரமாக ஆதரித்து வரும் வைரமுத்து, இப்போது விஜய்யின் அரசியல் என்ட்ரி சக்சஸ் ஆகும் என கவிதையாக எழுதியுள்ளது அரசியல் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.