சினிமா

Aaromaley: 6 கட்டையில் பாடத் தெரியுமா? டி.ஆர்-யிடம் சவாலா?

சமீபத்தில் படத்தின் டைட்டில் குறித்த ப்ரோமோ ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பிய ’ஆரோமலே' படக்குழு, படத்தின் அடுத்த அப்டேட்டாக முதல் பாடல் டிராக் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதுவும் பயங்கர மஜாவான ப்ரோமோவுடன்.

Aaromaley: 6 கட்டையில் பாடத் தெரியுமா? டி.ஆர்-யிடம் சவாலா?
first single from Aaromaley From Tomorrow
"ஆரோமலே" என்கிற இந்தத் தலைப்பைக் கேட்டதுமே, கௌதம் மேனன் இயக்கத்தில், சிம்பு - த்ரிஷா நடிப்பில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படத்தின் இடம்பெற்ற "ஆரோமலே" பாடல் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அந்த பாடல் கொடுத்த எனர்ஜி, ஒரு முழுப்படமாக இருந்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு இளைமைத்துள்ளல் கூட்டணி தான் ஆரோமலே படத்தில் இணைந்துள்ளது.

சரங் தியாகு இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம், ஒரு ஜாலியான காதல் கலந்த நகைச்சுவைப் படமாக உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படம் குறித்து வரும் வாரங்களில் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்திற்காக தமிழ் சினிமாவின் ஆல்ரவுண்டர் டி.ஆர் பாடியுள்ள பாடலை நாளை மாலை 5 மணியளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுத்தொடர்பாக ஒரு ப்ரோமோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.



விக்ரம் பட புகழ் விஷ்ணு எட்வன் இப்பாடலை எழுதியுள்ளார். பாடலில் இடம்பெறும் ரேப் பகுதிகளை ஆப்ரோ பாடியுள்ளார். ப்ரோமோவில், டி.ஆர்-யிடம் 6 கட்டையில் பாடத் தெரியுமா? என அவருக்கு சவால் விடும் வகையில் இசையமைப்பாளர் கேள்வி கேட்கிறார். இந்த கேள்வியை கேட்டதும் பாடலாசிரியரும், இயக்குநரும் இடத்தை காலி செய்கின்றனர். மொத்தத்தில் இந்த பாடலுக்கான ப்ரோமோவும், பட டைட்டிலுக்காக வெளியிடப்பட்ட ப்ரோமோவினை போல செம ஜாலியாக வந்துள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

படத்தின் நட்சத்திரப் பட்டாளமும், படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. வெப் சீரிஸ்கள் மூலம் பிரபலமான கிஷண் தாஸ், இந்தப் படத்தின் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக, 'அனகா', 'ரங்க மார்த்தாண்டா' போன்ற தெலுங்குப் படங்களில் நடித்து பிரபலமான ஷிவத்மிகா ராஜசேகர் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், பிரபல யூடியூப் நட்சத்திரமான ஹர்ஷத் கான், டிராகன் பட வெற்றியினை தொடர்ந்து ஆரோமலே படத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அனுபவமிக்க நகைச்சுவை நடிகர் விடிவி கணேஷ், சிபி ஜெயக்குமார், நம்ரிதா எம்வி, சந்தியா வின்ஃபிரட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவுப் பணிகளை கவுதம் ராஜேந்திரன் மேற்கொள்ள, படத்தொகுப்பை பிரவீன் ஆண்டனி கவனித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தை மினி ஸ்டுடியோஸ் LLP பேனரில் எஸ். வினோத் குமார் தயாரித்து வருகிறார். அதிதி ரவீந்திரநாத் இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார். இப்படம் இந்தாண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.