சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 திரைப்படம், எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. ஷங்கர் இயக்கிய இத்திரைப்படம் நெட்டிசன்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் கமலின் அடுத்தப் படமான தக் லைஃப் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் சிம்பு, த்ரிஷா ஆகியோரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நாசர், அபிராமி உள்ளிட்ட பலரும் தக் லைஃப் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் 2 தோல்வியில் இருந்து மீண்டு வர தக் லைஃப் படத்தை அதிகம் நம்பியுள்ளார் கமல்ஹாசன். இதனால் இத்திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி, தக் லைஃப் அடுத்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை என்பதால், பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதற்குள்ளாக படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்ஷனும் முடிந்துவிடும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவிருந்த அஜித்தின் குட் பேட் அக்லி ரிலீஸ் தேதியும் ஒத்தி வைக்கப்படவுள்ளதாம்.
அஜித் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி, அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை எனத் தெரிகிறது. இதனால் விடாமுயற்சி ரிலீஸுக்குப் பின்னரே குட் பேட் அக்லி படத்தை வெளியிட வேண்டும் என அஜித் தரப்பில் இருந்து மெசேஜ் சென்றுள்ளதாம்.
மேலும் படிக்க - தலைவன் மலையாள திரைப்படத்தின் முழு விமர்சனம்… ஓடிடி ரசிகர்கள் Don’t miss!
அதேபோல், விடாமுயற்சி படத்தை 2025 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவும் அஜித் தரப்பில் இருந்து ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். இதன் காரணமாக குட் பேட் அக்லி திரைப்படம், அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போதைய நிலவரப்படி அடுத்தாண்டு பொங்கலுக்கு கமலின் தக் லைஃப், அஜித்தின் விடாமுயற்சி இரண்டும் களமிறங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பொங்கல் பாக்ஸ் ஆபிஸ் ரேஸில் கமல் – அஜித் இடையே தரமான மோதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் கமலின் இந்தியன் 3ம் பாகமும் அடுத்தாண்டு ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்டதால், இனி போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டுமே மிச்சம் உள்ளன. எனவே தக் லைஃப் படத்தைத் தொடர்ந்து இந்தியன் 3ம் பாகமும் 2025ல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.