Thalavan Review: அடிபொலி க்ரைம் த்ரில்லர் மூவி… தலைவன் விமர்சனம்… ஓடிடி ரசிகர்கள் Don’t miss!
Thalavan Movie Review in Tamil : மலையாளத்தில் பிஜு மேனன், ஆசிப் அலி, மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள தலைவன் திரைப்படம், திரையரங்குகளைத் தொடர்ந்து சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள தலைவன் படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம்.

Thalavan Movie Review in Tamil : மலையாளத்தில் ஈகோவை பின்னணியாக கொண்டு உருவான அய்யப்பனும் கோஷியும், டிரைவிங் லைசென்ஸ் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வரிசையில் வெளியாகியுள்ள மற்றொரு திரைப்படம் தான் தலைவன். ஜிஸ் ஜாய் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பிஜு மேனன், ஆசிப் அலி இருவரும் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இவர்களுடன் திலீஸ் போத்தன், மியா ஜார்ஜ், அனுஸ்ரீ ஆகியோரும் நடித்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் (பிஜு மேனன்) பொறுப்பில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில், புதிய சப்-இன்ஸ்பெக்டராக வேலைக்கு சேர்கிறார் கார்த்திக் (ஆசிப் அலி). ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே ஈகோ யுத்தம் தொடர்கிறது. ஒரு வழக்கில் பிஜு மேனன் கைது செய்த குற்றவாளியை, ஆசிப் அலி ரிலீஸ் செய்துவிடுகிறார். இதனால் இருவருக்கும் இடையேயான ஈகோ மோதல் விஸ்வரூபம் எடுக்கிறது. இதுதான் படத்தின் கதையாக இருக்கும் என நினைத்தால், திரைக்கதையில் அட்டகாசமாக ஒரு ட்விஸ்ட்.
பிஜு மேனன் வீட்டு மாடியில் இளம் பெண் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்படுகிறார். இந்த கொலை குறித்து விசாரிக்கும் பொறுப்பு ஆசிப் அலியின் கைகளுக்குச் செல்கிறது. பிஜு மேனன் தான் அந்த கொலையை செய்தாரா? அதற்கான காரணம் என்ன? கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்? உண்மையான குற்றவாளி யார்? என அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் நகர்கிறது திரைக்கதை.
இது வழக்கமான க்ரைம் த்ரில்லர் கதை தானே என நினைத்தால், ஆசிப் அலியின் வீட்டிலும் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்படுகிறார். இப்போது இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் (பிஜு மேனன்), கார்த்திக் (ஆசிப் அலி) இருவருமே கொலை குற்றவாளிகளாக ஓடி ஒளிகின்றனர். இறுதியாக என்ன ஆனது, இரண்டு கொலைகளையும் செய்தது யார் என்பது தான் தலைவன் படத்தின் கதை.
குற்றவாளி யாராக இருக்க முடியும் என பார்வையாளர்களுக்கு பல இடங்கள் க்ளூ கொடுக்கிறது திரைக்கதை. ஆனாலும், கடைசி வரை அந்த சஸ்பென்ஸை தக்க வைத்ததே தலைவன் படத்தின் வெற்றி. பெண் கொலை வழக்கில் ஆசிப் அலி, பிஜு மேனன் இருவரும் தனித்தனியாக விசாரணை நடத்துகின்றனர். இரண்டு விசாரணையும் வேறுவேறு ட்ராக்கில் சென்று, இறுதியாக ஒரு புள்ளியில் இணையும் காட்சி சிறப்பாக வந்துள்ளது. முக்கியமாக இந்த கதையை சொல்லும் திலீஷ் போத்தனை வைத்து இறுதிக் காட்சியில் இயக்குநர் கொடுத்த சஸ்பென்ஸ் தரமான சம்பவம். தலைவன் படத்தின் இரண்டாவது பாகத்திற்கு லீடாக இது அமைந்துள்ளது.
மேலும் படிக்க - நான் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை... ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி அதிரடி!
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மிக சாதாரண பழிவாங்கும் கதை தான் தலைவன். ஆனால், அதை நேரடியாக பார்வையாளர்களுக்கு காட்டாமல் கொஞ்சம் சுற்றி வளைத்தும் சுவாரஸ்யமாகவும் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஜிஸ் ஜாய். 2 மணி நேரம் 10 நிமிடம் ரன்னிங் டைம் தான் என்பதால் தலைவன் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம். தேவையில்லாத காதல் காட்சிகள், டூயட் எல்லாம் இல்லாமல் இருப்பது பெரிய ஆறுதல். சின்னச் சின்ன லாஜிக் மீறல்கள் இருந்தாலும், க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு தலைவன் நல்ல திரை விருந்து. சோனி லிவ் (Sony Liv) ஓடிடியில் வெளியாகியுள்ள தலைவன் (Thalavan) மலையாளத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






