சினிமா

அரசியலுக்காக சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை- நடிகர் டி.ராஜேந்தர்

"உயிருள்ளவரை உஷா' படத்தை ரீ-ரிலீஸ் பண்ணச்சொன்னதே சிம்புதான் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

 அரசியலுக்காக சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை- நடிகர் டி.ராஜேந்தர்
நடிகர் டி.ராஜேந்தர் செய்தியாளர் சந்திப்பு
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னுடைய பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்யப் போகிறேன். அதற்காக ‘டி.ஆர். டாக்கீஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். ஓடிடி, யூடியூப் தொடங்குகிறேன்.

'உயிருள்ளவரை உஷா' ரீ-ரிலீஸ்

பழைய படங்களை நவீன டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றி வெளியிட உள்ளேன். 'உயிருள்ளவரை உஷா' படத்தை முதல் படமாக செப்டம்பரில் வெளியிட முயற்சிக்கிறேன்.
தொடர்ந்து மைதிலி என்னைக்காதலி, மோனிஷா என் மோனாலிசா உள்ளிட்ட பல படங்களை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளேன். விஜய்யின் 'கில்லி' ரீரிலீஸில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது.

Image

'உயிருள்ளவரை உஷா' படத்தில் ரஜினிதான் ஹீரோவாக நடிக்க வேண்டியது. கதை அவருக்குப் பிடித்திருந்தாலும், சிறிய தயாரிப்பு நிறுவனம் என்பதால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, எனக்கு ஏற்றது மாதிரி கதையை மாற்றிக்கொண்டேன்.

விரைவில் புதிய படம்

'உயிருள்ளவரை உஷா' படத்தை ரீ-ரிலீஸ் செய்யச் சொன்னதே சிம்புதான். அதில் உள்ள 'கட் அடிப்போம் கட் அடிப்போம் காலேஜுக்கு' பாடல் அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.அவர் கேட்டுக்கொண்டதால், அந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளோம்.

இறைவன் மனது வைத்தால், விரைவில் புதிய படம் ஒன்றை இயக்குவேன். காதல் ஜானரில் உருவாகும் இந்தப் படத்துக்காக, டி.ஆர். - சிம்பு கார்டனில் செட் உருவாகி வருகிறது. 4 புதுமுகங்களை ஹீரோயின்களாக அறிமுகப்படுத்த உள்ளேன்.

அரசியலால் பிரிய நேர்ந்தது

நடிகர் விஜயகாந்த் எனக்கு நெருங்கிய நண்பர்.அவர் படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆனால், அரசியலால் நாங்கள் பிரிய நேர்ந்தது. சிம்புவால்தான் நாங்கள் மறுபடியும் இணைந்தோம்.எனவே, அரசியலுக்காக என் சினிமா நண்பர்கள் யாரையும் இழக்கவில்லை.அது ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் சரி” என தெரிவித்தார்.