சினிமா

'கரங்கள் ஒசரட்டுமே'.. பாக்ஸ் ஆபிஸ் கலக்கும் ‘கூலி’

ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘கூலி’ திரைப்படம் வெளியான 4 நாட்களில் ரூ.404 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

'கரங்கள் ஒசரட்டுமே'.. பாக்ஸ் ஆபிஸ் கலக்கும் ‘கூலி’
Coolie Box Office
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியானது. ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படம், உலகளவில் வசூல் சாதனைகளைப் படைத்து, தமிழ்த் திரையுலகில் புதிய மைல்கற்களை எட்டியுள்ளது.

வசூல் வேட்டையில் ‘கூலி’

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘கூலி’ திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூலில் எந்த பாதிப்பும் இல்லாமல் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.151 கோடி வசூலித்து, விஜய்யின் ‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்தது.

மேலும், இப்படம் வெறும் மூன்று நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டி, மிக வேகமாக இந்த மைல்கல்லைக் கடந்த தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்றது. இதற்கு முன்னர், 'லியோ' திரைப்படம் ஐந்து நாட்களில் இந்தச் சாதனையை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சொந்த சாதனையை மீண்டும் ஒருமுறை முறியடித்துள்ளார். 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் நிறைவு செய்துள்ள ‘கூலி’ திரைப்படம், உலகளவில் ரூ.404 கோடி வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நட்சத்திரப் பட்டாளம் மற்றும் வரவேற்பு

‘கூலி’ படத்தில் ரஜினிகாந்துடன், நாகார்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பான் இந்தியா நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். மேலும், நடிகை பூஜா ஹெக்டே 'மோனிகா...' என்ற சிறப்புப் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

கலவையான விமர்சனங்கள் இருந்தபோதிலும், ‘கூலி’ திரைப்படம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் சர்வதேச சந்தைகளிலும் அபாரமான வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.