சினிமா

'கலக்குங்க சார் கலங்குங்க..' நடிகர் சாம்ஸ் தன் பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என மாற்றினார்!

நடிகர் சாம்ஸ் தனது பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என்று மாற்றியுள்ளார்.

'கலக்குங்க சார் கலங்குங்க..' நடிகர் சாம்ஸ் தன் பெயரை 'ஜாவா சுந்தரேசன்' என மாற்றினார்!
Actor Sams changed his name to Java Sundaresan
இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'அறை எண் 305ல் கடவுள்'. இத்திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சாம்ஸ் (இயற்பெயர்: சுவாமிநாதன்) நடித்த 'ஜாவா சுந்தரேசன்' என்ற கதாபாத்திரம் மிகவும் புகழ்பெற்றது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்ட அந்தக் கதாபாத்திரத்தின் பெயரையே தனது அதிகாரபூர்வப் பெயராக மாற்றியுள்ளார்.

'மக்கள் விருப்பமே மகேசன் விருப்பம்'

இதுகுறித்து நடிகர் சாம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாம்ஸ் என்ற பெயரில்தான் பல வருடங்களாகப் பல படங்களில் நடித்து வந்துள்ளேன். ஆனால், இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் வந்த 'அறை எண் 305ல் கடவுள்' படத்தில் நான் நடித்த 'ஜாவா சுந்தரேசன்' கதாபாத்திரம் மிகவும் புகழ்பெற்று, அந்தப் பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கதாபாத்திரம் அன்றே பேசப்பட்டாலும், சமூக வலைதள மீம்ஸ்களால் சாம்ஸின் முகம் அடிக்கடி பயன்படுத்தப்பட்டதன் விளைவாக 'ஜாவா சுந்தரேசன்' கதாபாத்திரத்திற்கெனத் தனி ரசிகர் கூட்டமே உருவானது.

எனவே, "மக்கள் விருப்பமே மகேசன் விருப்பமாக ஏற்று எனது பெயரை ஜாவா சுந்தரேசன் என்று மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வரும் சாம்ஸ், திரைவாழ்வில் இக்கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்தாலும், அதையே தன் பெயராக மாற்றிக்கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநரிடம் அனுமதி

ஜாவா சுந்தரேசன் என்ற கேரக்டரை உருவாக்கிய இயக்குநர் சிம்பு தேவனிடம் முறைப்படி அனுமதி பெற்றுக் கொண்டு, அவரின் வாழ்த்துக்களோடு இனி தான் ஜாவா சுந்தரேசன் ஆகத் தனது திரைப்பயணத்தைத் தொடர்வதாக சாம்ஸ் கூறியுள்ளார்.

அவர் மேலும், "அனைவரும் வழக்கம்போல் தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தந்து இனி என்னை ஜாவா சுந்தரேசன் என்றே அழைக்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.