சினிமா

நடிகர் ரவி மோகன் பட தலைப்புக்கு சிக்கல்.. டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரவி மோகன் திரைப்படத்திற்கு 'BRO CODE' என்ற பெயரை பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

நடிகர் ரவி மோகன் பட தலைப்புக்கு சிக்கல்.. டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Bro Code Movie Title Issue
நடிகர் ரவி மோகனின் 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' தயாரிப்பு நிறுவனம், கார்த்திக் யோகி இயக்கத்தில் தயாரித்து வரும் 'BRO CODE' திரைப்படத்தின் தலைப்புக்குச் சிக்கல் எழுந்துள்ளது. இந்தப் பெயருக்கு மதுபான நிறுவனம் ஒன்று எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, திரைப்படத்திற்கு அத்தலைப்பை பயன்படுத்த டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மதுபான நிறுவனத்தின் நோட்டீஸ்

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ரவி மோகன் ஸ்டூடியோஸ்' மூலம் படங்களைத் தயாரித்து வருகிறார். 'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி' உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் புதிய திரைப்படத்திற்கு 'BRO CODE' என்று பெயரிடப்பட்டது. இதில் எஸ்.ஜே. சூர்யா, ஷரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'ப்ரோ கோட்' என்ற பெயரில் மதுபானம் தயாரித்து வரும் இண்டோ ஸ்பிரிட் பிவரேஜஸ் (Indo Spirit Beverages) நிறுவனம், அந்தப் பெயருக்குத் தாங்கள் பதிப்புரிமை பெற்றுள்ளதால், திரைப்படத்திற்கு அந்தத் தலைப்பைப் பயன்படுத்தக் கூடாது என்று ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

இந்த நோட்டீஸ் தொடர்பாக அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, பிரபலமாக உள்ள 'BRO CODE' என்ற தலைப்பைத் திரைப்படத்திற்கு வைப்பது வணிகச் சின்னத்தை மீறும் செயல் என்ற வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இதன் காரணமாக, நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக் கருதி, 'BRO CODE' தலைப்பைத் திரைப்படத்தின் விளம்பரம் மற்றும் வெளியீட்டிற்குப் பயன்படுத்த ரவி மோகன் ஸ்டூடியோஸுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்து ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.