சினிமா

Jailer: மாதேஸ்வரன் மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினி

’ஜெயிலர் 2’ படப்பிடிப்பின் போது மாதேஸ்வரன் கோயிலில் ரஜினி சாமி தரிசனம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Jailer: மாதேஸ்வரன் மலைக்கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினி
கடந்த 2023-ஆம் ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘காவாலா’ பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடியிருந்தார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. ’ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. இந்த பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழக - கேரள எல்லையான ஆனைகட்டி, அட்டப்பாடியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் ரஜினி அங்கு உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். ரஜினியை பார்ப்பதற்கு காலை, மாலை என இரு வேலைகளிலும் ரசிகர்கள் அவர் தங்கி இருக்கும் ரிசார்ட் முன்பு குவிந்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்கு கிளம்பிய ரஜினியை பார்த்த ரசிகர் ஒருவர் கையில் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி காண்பித்து கும்பிடு போட்டார். இதனை தொடர்ந்து ரசிகர்களை பார்த்து ரஜினி கை அசைத்து விட்டு அங்கு இருந்து சூட்டிங் கிளம்பி சென்றார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. நேற்று கோவை அருகே உள்ள தமிழக சோதனை சாவடியான மாங்கரை அருகே படப்பிடிப்பிற்காக ரஜினி வந்திருந்தார்.

அப்போது ரஜினியை காண குவிந்த ரசிகர்கள் தலைவா, தெய்வமே என குரல் எழுப்பி அவரின் காரை சூழ்ந்து கொண்டனர். அவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு அங்கு இருந்து கடந்து சென்றார் நடிகர் ரஜினி . தொடர்ந்து, அந்த வழியாக செல்லும் போது மலைப்பாதையில் உள்ள மாதேஸ்வரன் கோயிலில் சாமி தரிசனம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.