சினிமா

25-வது திருமண நாளை கொண்டாடிய அஜித்-ஷாலினி

நடிகர் அஜித்குமார்-ஷாலினி தம்பதியினர் தங்களது 25-வது திருமண நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

25-வது திருமண நாளை கொண்டாடிய அஜித்-ஷாலினி
திரைப்பட நடிகர், ரேஸர் என பல துறைகளில் வல்லவனாக இருப்பவர் அஜித்குமார். இவர் 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். பின்னர், கடந்த 1999-ஆம் ஆண்டு வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்தார். இந்த படத்தில் தான் இருவரும் முதன் முதலாக ஜோடியாக நடித்தனர்.

இப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதையடுத்து, நடிகர் அஜித்குமாருக்கும் ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தங்கள் குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உட்பட திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினியை படத்தில் நடிக்க கூறி பல இயக்குநர்கள் அணுகிய நிலையில் அவர் இனி திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். திரையுலகின் கியூட் ஜோடியாக வலம் வரும் அஜித்-ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணநாள் கொண்டாட்டம்

இந்நிலையில், நடிகர் அஜித்-ஷாலினி தம்பதியினர் தங்களது 25-வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.