Breaking news

வாக்கிங் சென்றபோது தலைசுற்றல்.. மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைப்பயிற்சி மேற்கொண்ட போது ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாக்கிங் சென்றபோது தலைசுற்றல்.. மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி!
Stalin Admitted to Apollo Hospitals Following Mild Dizziness
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுத்தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் தனது வழக்கமான காலை நடைப்பயிற்சியினை மேற்கொண்டிருந்த போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. அதுத்தொடர்பாக பரிசோனை மேற்கொள்வதற்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வருக்கு தேவையான நோயறிதல் பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை முன்னாள் எம்.பி.யும், அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வந்த அன்வர்ராஜா அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவதற்காக திமுகவின் தலைமைச் செயலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். திமுகவின் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார் அன்வர் ராஜா. அப்போது கூட முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன், அன்வர் ராஜாவினை வரவேற்று இருந்தார். அதுத்தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியானது.

இந்நிலையில், திடீரென முதல்வர் மருத்துவமனைக்கு சென்றுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்த நிலையில், அப்போல்லா மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே அரசு தொடர்பான நிகழ்வில் பங்கேற்பதற்காகவும், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை தொடங்கி வைப்பதற்காகவும் முதல்வர் ஸ்டாலின் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை அறிந்து திமுகவினர் கவலையடைந்துள்ளனர்.