Velankanni Matha Temple Annual Festival 2024 Begins Today : கீழ் திசை நாடுகளின் லூர்து நகர் என்ற சிறப்பு பெற்றது வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி மாதா பிறந்தநாள் அன்று கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுவது வழக்கம். 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டு திருவிழாவில் தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் இங்கு வருகை தருவர்.
நடப்பாண்டு ஆண்டு திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) மாலை 5:45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே வேளாங்கண்ணி முழுவதும் பக்தர்கள் வருகையால் களை கட்டியுள்ளது. தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடைபயணம் மேற்கொண்டு வேளாங்கண்ணி நகருக்குள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பிரதான சாலைகளான நாகை - சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, தஞ்சை - திருச்சி நெடுஞ்சாலை, நாகை - தூத்துக்குடி கிழக்குக் கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் சாலை மார்க்கமாக பக்தர்கள் மாதாவின் சுரூபத்தை தாங்கிய வண்ணம் பாதயாத்திரை ஆக வருகைத் தருகின்றனர்.
இன்று மாலை 5 மணி அளவில் பேராலயத்தில் இருந்து ஊர்வலமாக கடற்கரை சாலை ஆரின் நாட்டு தேர்வு வழியாக மாதா கொடி கொண்டு செல்லப்பட்டு கொடிமரத்தில் ஏற்றிவைக்கப்படவுள்ளது. வேளாங்கண்ணியில் குவிந்து வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வேளாங்கண்ணி பேரால நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. குறிப்பாக பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முழுவதும் செய்து தரப்பட்டுள்ளது. குடிநீர் கழிப்பறை சுகாதாரம் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வரக்கூடிய பக்தர்களுக்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் 1050 சிறப்பு பேருந்துகள் 10 நாட்களும் இயக்கப்பட உள்ளது. இதேபோல் தென்னக ரயில்வே வேளாங்கண்ணிக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை விரிவாக ஏற்பாடு செய்துள்ளது. மேலும் 20க்கும் மேற்பட்ட டிஎஸ்பிக்கள் உட்பட தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட காவலர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட காவல்துறை மற்றும் சாஸ்திரா பல்கலைக்கழகம் இணைந்து எஃப்ஆர்எஸ் எனக்கூடிய அதி நவீன தொழில்நுட்பத்தினை கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: இன்று உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதா?
லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு நாகை மற்றும் கீழ்வேளூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.