ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தலைமைச் செயலர், டிஜிபி ஆஜராக மதுரை கிளை உத்தரவு!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாதது ஏன் என்பது குறித்து தமிழக தலைமைச் செயலரும், டிஜிபியும் ஆஜராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு: தலைமைச் செயலர், டிஜிபி ஆஜராக மதுரை கிளை உத்தரவு!
Madurai Bench orders Chief Secretary and DGP to appear
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப் போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு இன்று (டிசம்பர் 9) மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து விளக்கமளிக்க தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் வரும் 17-ஆம் தேதி காணொலியில் ஆஜராகுமாறு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

அரசுத் தரப்பின் வாதங்கள்

தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், "மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் திரி, எண்ணெய், மலை எங்கும் போய்விடாது. நீதிபதி உத்தரவு சரியா தவறா என்பதற்கே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும்?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.

மேலும், "கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்ல முடியாது. நீதிமன்றம் கூட சொல்ல முடியாது. தேவஸ்தானமே முடிவு செய்ய இயலும். பிரச்னை வந்தால், நீதிமன்றத்தை காரணம் காட்ட இயலாது. அரசே பொறுப்பேற்க வேண்டும். சட்டம் ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், அதன்பின் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும்" என்றும் அரசுத் தரப்பு தெரிவித்தது.

நீதிபதியின் உத்தரவு மற்றும் காலக்கெடு

இதனையடுத்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "திருப்பரங்குன்றம் வழக்கு, தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்து உரிமை தொடர்பானதும் கூட" என்று தெரிவித்தார். அரசுத் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, "உங்கள் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன். ஆனால், அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது இடைக்கால உத்தரவு பெறப்படவில்லை எனில் அப்போதும் ஒத்திவைக்க இயலாது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நடந்த விசாரணையின்போது, திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வரும் டிசம்பர் 17-ஆம் தேதி தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் காணொலியில் ஆஜராகி விளக்கமளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.