ஆன்மிகம்

சிவபெருமானிடம் சாபத்தையும் மன்னிப்பையும் பெற்ற தாழம்பூ!

மருத்துவ குணம் நிறைந்த தாழம்பூ ஏன் ஆன்மிக வழிபாடுகளில் பயன்படுத்தவில்லை என்பதை இப்பகுதியில் காணலாம்.

சிவபெருமானிடம் சாபத்தையும் மன்னிப்பையும் பெற்ற தாழம்பூ!
thalampoo: Cursed and Blessed by Lord Shiva
சங்க இலக்கியத்தில் கைதை என்றும், பிற்கால இலக்கியத்தில் முண்டகம், முடங்கல், முரலி என்ற பெயர்களிலும் குறிப்பிடப்படும் தாவரம் தாழை.

தாழம்பூ என்றால் இது சட்டென்று நினைவுக்கு வரும். ஆதியில் ஜோதியாகத் தோன்றிய ஈசனின் திருவடி, திருமுடியை பிரம்மனும் விஷ்ணுவும் தேடிச் சென்றனர். அப்போது பிரம்மா, ஈசனின் தலையில் இருந்து விழுந்த தாழம்பூவை பொய் சாட்சி சொல்லச் சொன்னதாக புராணம் சொல்கிறது. அதாவது ஆதிநாள் முதலே சிவ வழிபாட்டிற்கும் தாழம்பூவிற்கும் தொடர்பு இருந்துள்ளது. அதன் பின்னரே சாபத்தின் காரணமாக தாழம்பூ சிவ வழிபாட்டில் இருந்து விலக்கப்பட்டிருக்கிறது.

நெய்தல் நிலத்து மரமாக விளங்கும் தாழை, கடற்கரை பகுதிகள், நீர் நிலைகளின் கரையோரங்களில் வளரும் தன்மை கொண்டது.நூற்றுக்காணக்கான பிரிவுகள் உள்ள தாழையில் இந்தியாவில் சுமார் இருபது வகையான இனங்கள் உள்ளன.

நறுமணம் மிகுந்த தாழம்பூ வரலக்ஷ்மி விரதத்தின் போது பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது, பெண்கள் சூடும் மலராகவும் விளங்குகிறது. தாழை மரத்தில் ஆண், பெண் என இரண்டு பிரிவுகள் உள்ளன. ஆண் மரங்களில் பூக்கும் மலர்களே அதிக வாசனை கொண்டவையாக விளங்குகின்றன. இதன் இலை ஓரங்களில் முட்கள் இருக்கும்.

தலமரம்:சிவபெருமானின் சாபம் காரணமாக, தாழை எந்த சிவாலயத்திலும் ஏற்கப்படாத மலரானது. அதேசமயம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உத்தரகோசமங்கை தலத்தில் சிவபெருமானை வணங்கி சாப நிவர்த்தி பெற்றதால், அத்தலத்தில் தாழையே, தலமரமாக உள்ளது. மேலும் இந்திரனின் சாபம் நீங்கிய திருமயேந்திரப்பள்ளி சாயாவனேஸ்வரர் தலத்திலும் தாழையே தலமரமாக இருக்கிறது.

ஈசனிடம் பெற்ற வரம் காரணமாக, மகா சிவராத்திரியன்று மட்டும் தாழம்பூ சிவாலயங்களில் பயன்படுத்தப்படுகிறது. 108 திவ்ய தேசங்களுள் ஒன்றான "அன்பில்" எனும் வைணவத் திருத்தலத்தின் தலமரம், தாழை மரமாகும். தாழையில் செந்தாழை, வெண் தாழை என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. பாரம்பரிய மருத்துவ முறையில் வெண் தாழையைவிட செந்தாழையே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. தாழம்பூ மிகச்சிறந்த கிருமிநாசினியும் கூட பழங்காலத்தில் அம்மை நோய் கண்டவர்கள் வீடுகளின் வாயிலில் இதைக் கட்டித் தொங்கவிடுவது வழக்கம்.

தாழையின் மடல், மலர், கனி, தண்டு, பட்டை, வேர் அனைத்தும் மருந்தாகப் பயன்படுகின்றன.

(கட்டுரை: பனையபுரம் அதியமான்/ 14.08.2025 / குமுதம் பக்தி)