ஆன்மிகம்

ரிஷபம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: வார்த்தையில் கவனம்..மற்றபடி முன்னேற்றம் தான்!

ரிஷபம் ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்களை குமுதம் வாசகர்களுக்காக துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.

ரிஷபம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: வார்த்தையில் கவனம்..மற்றபடி முன்னேற்றம் தான்!
rishabam rasi guru peyarchi palangal 2025
நவகிரஹங்கள் ஒன்பதுமே குறிப்பிட்ட கால இடைவெளியில நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதே சமயம், குரு, ராகு-கேது, சனி கிரஹங்களின் நகர்வுகள் மட்டுமே அனைவராலும் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்றும், திருக்கணிதப்படி 14.05.2025 அன்றும் குருபெயர்ச்சி ஏற்பட உள்ளது. இதனடிப்படையில், ரிஷபம் ராசிக்காரர்களுக்கான குரு பெயர்ச்சி பலன்கள்-பரிகாரங்களை குமுதம் வாசகர்களுக்காக துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ.. அதன் விவரம் பின்வருமாறு-

ரிஷபம்:

உங்கள் ராசிக்கு 8-ம் இடமான தனுசுவுக்கும் 11-ம் இடமான மீனத்துக்கும் உரியவரான குரு பகவான், தற்போது, உங்கள் ஜன்ம ராசியான ரிஷபத்தில் இருந்து, ராசிக்கு இரண்டாமிடமான மிதுனத்துக்குச் செல்கிறார்ங்க. இந்த சமயத்துல அவருடைய சிறப்புப் பார்வைகள் உங்க ராசிக்கு முறையே ஆறு, எட்டு, பத்தாம் இடங்கள்ல பதியுதுங்க. இந்த இடங்கள் முறையே சத்ருரோகம், ஆயுள், ஜீவனஸ்தானமாக அமையுதுங்க. திருக்கணிதத்தின்படி நடந்துள்ள துள்ள பெயர்ச்சிக்குப் பிறகு பதினோராம் இடமான லாபஸ் தானத்துல சனி இருப்பதையும், பத்தாம் இடத்துக்கு ராகுவும், நான்காம் இடத்துக்கு கேதுவும் வரக்கூடிய பெயர்ச்சி நடக்க இருப்பதையும் கவனத்தில் கொள்ளணும்க.

முன்னேற்றத்தை தரும் குருப்பெயர்ச்சி:

இந்த அமைப்புகளின் காரணமாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும்க. அதேசமயம் வார்த்தையிலும் உடல் நலத்திலும் கூடுதல் அக்கறை செலுத்தறது நல்லதுங்க. அலுவலகத்துல உங்க திறமைக்கு உரிய பெருமைகள் நிச்சயம் கிடைக்கும்க. எதிர்பார்த்தபடியே இடமாற்றம், பதவி உயர்வு கிட்டும்க. அதேசமயம் கூடுதலாக பொறுப்புகளும் அதிகரிக்கலாம்க. பொறுப்புச் சுமை அதிகம்னு எந்த சமயத்திலும் முணங்காம இருக்கறது அவசியம்க. எந்த சமயத்துலயும் எல்லாம் தெரியும் நினைவும், ஏனோதானோ செயலும் கூடாதுங்க. இந்த சமயத்துல கோள் சொல்லக் கூடியவங்ககூட நட்பு வைச்சுகிட்டா, கோள்கள் அனுகிரகமும் கெட்டு கோளாறுகளும் ஆரம்பமாகிடலாம், உடனடியாக விலகிடறது உத்தமம்க. புதிய பணி வாய்ப்பு நிச்சயம் கைகூடும்க. அதேசமயம் இருப்பதை விட்டுவிட்டு புதியதைப் பிடிக்க நினைக்க வேண்டாம்க. புதிய வாய்ப்பு கைக்கு எட்டிய பிறகு இருப்பதைவிடுவதுதான் புத்திசாலித்தனம்க.

Read more: மேஷம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: பெண்களுக்கு யோகமான காலகட்டம் இனி ஆரம்பம்

குடும்பத்துல நிம்மதியும் ஒற்றுமையும் இடம்பிடிக்கும்க. தடைபட்ட விசேஷங்கள், படிப்படியா வரத் தொடங்கும்க. உங்க வாக்குக்கு செல்வாக்கு உயரும்க. அத நிலைக்கணும்னா, விட்டுக் கொடுத்துப் போகும் குணம் ரொம்ப ரொம்ப அவசியம்க. குலதெய்வத்தை தினமும் கும்பிடறது குடும்ப நிம்மதிக்கு வழி செய்யும்க. பெற்றவங்க உடல்நலத்துல கவனம் செலுத்தறது முக்கியம்க. அக்கம் பக்கத்து நட்புகளிடம் தரல் பெறல்ல கவனமா இருங்க. எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகறது அவசியம்க. பூர்வீக சொத்துல அலட்சியம் வேண்டாம்க மூன்றாம் நபர் யாரையும் குடும்ப மத்தியஸ்தத்துக்கு கூப்பிடாதீங்க. பகைச்சுக்கிட்டு வாங்கமுடியாததை பாசத்தால பெறமுடியும்கறதை நினைவுல வைச்சுக்குங்க.வீடு, வாகனம் புதுப்பிக்க, வாங்க சந்தர்ப்பம் வரும்க. சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பொருள்சேர்க்கை ஏற்படும். வரவை சேமிக்கப் பழகுங்க.

செய்யும் தொழில்ல தொடர்ச்சியாக முன்னேற்றம் ஏற்படும்க. அயல்நாட்டு வர்த்தகத்துல வளர்ச்சி உருவாகும்க, அது தொடர, முழுமையான முயற்சியும் நேரடி கவனமும் முக்கியம்க. சீரான வளர்ச்சி வரும்போது நேரான பாதையில போகறது அவசியம்க. புதிய முதலீடுகளை செய்யும் முன் அனுபவம் மிக்கவங்களோட கலந்து யோசிக்கறது நல்லதுங்க. பங்குவர்த்தகத்துல அனுபவம் இல்லாம ஈடுபடுவதைத் தவிர்க்கறதுதான் நல்லதுங்க. உங்க தனிப்பட்ட பெயர்ல புதிய தொழில் எதையும் தொடங்கறதைவிட உண்மையான அன்பு உள்ளவங்க பெயரோட இணைந்து தொடங்கறது நற்பலன் தரும்க.

வார்த்தையே யோசித்து பேசுங்க:

அரசு, அரசியல் துறையினர்க்கு ஆதரவு நிலைக்கும்க பொது இடங்கள்ல பேசும்போது எந்த சமயத்துலயும் நிதானமாக இருக்கறதும், ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்துப் பேசறதும் அவசியம்க. முகஸ்துதி நட்புகள் முதுகுப்பக்கமா குழி தோண்டலாம், அத்தகைய நபர்களை உடனே விலக்கறது உத்தமம்க. அரசுத் துறையினர், சீரான வளர்ச்சிகளைப் பெறலாம்க. சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட சீறிப் பாயறதும், உணர்ச்சிவசப்படறதும் கூடாதுங்க. பணி சார்ந்த ரகசியங்கள் எதையும் பகட்டுக்காகப் பிறரிடம் பகிரவேண்டாம்க.

கலை, படைப்புத் துறையினர்க்கு பலகாலக் கனவுகள் நனவாகி, அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும்க. உங்க திறமைகளை ஊரே மெச்சும் அளவுக்கு உயர்வுகள் வரும்க. பட்ட அனுபவத்தை பாடமா வைச்சுக்கிட்டு, வரும் வாய்ப்புகளை பொறுப்பு உணர்ந்து பயன்படுத்திக்கறது அவசியம்க. மாணவர்கள் கவனத்தை திசை திருப்பாம படிச்சா, கணிசமான வெற்றி கைக்கு எட்டும்க. படிக்கும் பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்க்கறதும் நல்லதுங்க. நட்புகளுடனான களியாட்டங்களை இயன்றவரை தவிருங்க.

பயணப்பாதையில் கவனச்சிதறல் கூடவே கூடாதுங்க. தொலைதூரம் செல்லும்போது குடும்பத்துடன் ஒரே வாகனத்துல இரவு நேரத்துல பயணிக்க வேண்டாம்க. கூட்டமாக இருக்கும் இடங்களில் வேடிக்கைபார்க்கச் செல்வதைத் தவிருங்க. உடல்நலத்துல கொஞ்சம் கூடுதலாகவே கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்க. சிறு அறிகுறியை அலட்சியப்படுத்தினாலும் பெரும் பின் விளைவு ஏற்படலாம்க. நரம்பு, இடதுபக்க உபாதைகள், ரத்த அழுத்த மாற்றம்னு, ஏற்கெனவே ஆரோக்ய பிரச்னை உள்ளவங்க, முறையான சிகிச்சையை ஒரு நாள்கூட தவிர்க்க வேண்டாம்க. பெண்களுக்கு ஹார்மோன் சம்பந்தப்பட்ட சிறு பிரச்னை தெரிஞ் சாலும் உடனடி சிகிச்சை அவசியம்க. மன அழுத்தம் தவிர்க்க தியானம்,யோகா பழகறது நல்லதுங்க.

இந்தக் காலகட்டத்துல ஒருமுறை கஞ்சனூர் சென்று, சுவாமி அம்பாளை வணங்கிட்டு, சுக்ரபகவானுக்கு இயன்ற அர்ச்சனை, ஆராதனை செய்துட்டு வாங்க. எப்போதும் மகாலக்ஷ்மியைக் கும்பிடுங்க. வாழ்க்கை வசந்தமாகும்.