சென்னை எழிலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
சென்னை மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலக வளாகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மை காலமாக தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், தலைமை செயலகம், ஆளுநர் மாளிகை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து வரும் வெடிகுண்டு மிரட்டலால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு 237 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த சர்வதேச விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபரிடம் இருந்து தொலைப்பேசி அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பத்திரமாக தரையிறங்கிய விமானத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, வெடிப்பொருட்கள் எதுவும் இல்லை என்று உறுதியான பின்பே பயணிகள் பெருமூச்சு விட்டனர்.
இதேபோல், அண்மையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் இமெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்களுடன் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்ட நிலையில் எந்த வெடிபொருட்களும் கிடைக்காததால் அது வெறும் புரளி என தெரியவந்தது.
இந்நிலையில், தற்போது சென்னை எழிலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெரினா காமராஜர் சாலையில் அமைந்துள்ள எழிலகத்தின் வளாகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக நீர்வளத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் பொதுப்பணி துறை அரசு ஊழியர்களின் தலைமை அலுவலகம் இங்கு தான் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக அண்ணா சதுக்கம் மற்றும் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் வெடி பொருட்கள் எதுவும் கிடைக்காததால் இது வெறும் புரளி என்று தெரியவந்தது. மேலும், சந்தேகத்தின் பேரில் பாலாஜி என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?






