இந்தியா

Snake Died : பொம்மை என நினைத்து பாம்பை கடித்த குழந்தை.. பாம்பு உயிரிழப்பு!

Snake Died in Bihar : 1 வயது ஆண் குழந்தை ஒன்று தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பாம்பு குட்டி ஒன்று குழந்தையின் பக்கத்தில் ஊர்ந்து சென்றுள்ளது. இதைப் பார்த்த குழந்தை பொம்மை என நினைத்து பாம்பை கையில் எடுத்து கடித்துள்ளது.

Snake Died : பொம்மை என நினைத்து பாம்பை கடித்த குழந்தை.. பாம்பு உயிரிழப்பு!
Child Bitten A Snake

Snake Died in Bihar : 'பாம்பை கண்டால் படையும் நடுங்கும்' என்பது பழமொழி. கிங் கோப்ரா, கட்டு விரியன் மற்றும் நல்ல பாம்புகள் தீண்டி ஆண்டுதோறும் ஏராளமான மனிதர்கள் உயிரிழந்து வருவதே இதற்கு காரணம். பாம்புகள் கடித்து மனிதர்கள் உயிரிழப்பது வழக்கம். ஆனால் மனிதன் கடித்து பாம்பு உயிரிழந்ததை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதுவும் சிறு குழந்தை கடித்து பாம்பு இறந்ததை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? 

அப்படி ஒரு சம்பவம்தான் பீகாரில் நடந்துள்ளது. பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 1 வயது ஆண் குழந்தை ஒன்று தனது வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பாம்பு குட்டி ஒன்று குழந்தையின் பக்கத்தில் ஊர்ந்து சென்றுள்ளது. இதைப் பார்த்த குழந்தை பொம்மை என நினைத்து பாம்பை கையில் எடுத்து கடித்துள்ளது. 

இதனால் பாம்பு குழந்தையை கொத்தியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தைக்கு உடனே சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது குழந்தை நல்ல நிலையில் இருக்கிறான். ஆனால் குழந்தை மிக வலுவாக கடித்ததால் அந்த பாம்பு உயிரிழந்து விட்டது. 

குழந்தையை கடித்த பாம்புக்கு விஷம் இல்லை. இதனால் நல்ல வேளையாக குழந்தைக்கு ஏதும் ஆபத்து இல்லை. இந்த சம்பவத்தை வைத்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் சுவாரஸ்யமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ''பாம்பை கண்டால் படையும் நடுங்கும். ஆனால் ஒரு பாம்பையே கடிச்சி கொன்னது நீதான்பா.. நீ உண்மையியே பெரிய ஆளுதான்பா'' என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

அதே வேளையில் ''இன்னும் நடக்க பழகாத கைக்குழந்தைகளை பெற்றோர்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தையை கடித்தது விஷம் இல்லாத பாம்பு என்பதால் பெரிய அளவில் ஆபத்து இல்லை. இதுவே விஷப் பாம்பாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்'' என்று ஒரு சிலர் அக்கறையுடன் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில் மத்திய பிரதேசத்தில் பாம்பு பிடி வீரரை கடித்த பாம்பு ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் நடந்தது. மத்திய பிரதேச மாநிலத்தில் நாராயணாவலி என்ற இடத்தில் சந்திரகுமார் அஹிர்வார் என்ற பாம்பு பிடி வீரர் 'கிங் கோப்ரா' பாமபு கடித்ததில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். 

விஷப் பாம்பை பிடித்த சந்திரகுமார் அஹிர்வார், அதனை ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் பூட்டி வைத்துள்ளார். அந்த பிளாஸ்டிக் பெட்டி முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. அதில் காற்று போக எந்த வசதியும் இல்லாததால் அதன் உள்ளே வைக்கப்பட்ட  'கிங் கோப்ரா' பாம்பு மூச்சுத்திணறி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.