8 அமைச்சர்கள்... 4 டீம்...! அமித்ஷா கையில் ஹாட் ரிப்போர்ட்..? ஷாக்கில் திமுக...!
அமித்ஷாவின் அதிரடி கோவை விசிட் மற்றும் சீரியஸ் டிஸ்கஷனைத் தொடர்ந்து, அவர் கையில் தி.மு.க. அமைச்சர்களின் பர்ஃபார்மென்ஸ் ரிப்போர்ட் கிடைத்ததும், அதற்கு அவர் காட்டிய ரியாக்ஷனும்ன்தான் அரசியல் களத்தில் ஹாட் நியூஸாக வலம் வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

கோவை ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் விருந்தினராக கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க அலுவலக திறப்புவிழா நிகழ்விலும் பங்கேற்றார். அப்போது கொங்கு மண்டல பா.ஜ.க.வின் அடுத்தகட்ட செயல்பாடுகள் பற்றி அமித் ஷா சில கட்டளைகளை இட்டுச் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமித் ஷாவின் கோவை விசிட் குறித்து பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு நான்கில் இரண்டு எம்.எல்.ஏ.க்களை கொடுத்தது கொங்கு மண்டலம்தான். அதேபோல் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமான பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு கணிசமான சதவிகித வாக்குகளை அள்ளிக் கொடுத்ததும் இந்த மண்டலம்தான்.
அதனடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் மற்ற மண்டலங்களைவிட கொங்கு மண்டலத்தில் அதிக கவனம் செலுத்துவதென்று தேசிய தலைமை முடிவெடுத்துவிட்டதாகவும், குறிப்பாக கொங்கு மண்டலத்தின் நீலகிரி முதல் கிருஷ்ணகிரி வரையிலான ஒன்பது மாவட்டங்களில் எங்கள் கட்சியின் செல்வாக்கு குறித்து சர்வே எடுப்பதைவிட, ஆளும் தி.மு.க.வின் செல்வாக்கு பற்றி விரிவான ஆய்வு செய்ய டெல்லி தலைமை நினைத்ததாகவும் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இந்த ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களின் செயல்பாடுகள், சர்ச்சைகள், சொத்துகள் தொடங்கி அவர்களின் பிளஸ் மைனஸையும் சர்வே எடுத்திருக்கிறார்களாம். இதை செய்து கொடுக்கும் பொறுப்பு முரளிதர ராவிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், கொங்கு மண்டல அமைச்சர்களான செந்தில் பாலாஜி, மு.பெ.சாமிநாதன், கயல்விழி, முத்துசாமி, மதிவேந்தன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகிய எட்டு பேரையும் நான்கு டீம்கள் முழுமையாக ஸ்கேன் செய்து பக்காவான ரிப்போர்ட் ரெடி செய்து கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில், செந்தில் பாலாஜி 50க்கும் அதிகமான மார்க் வாங்கியிருக்கிறாராம். ஸ்டாலின், உதயநிதிக்கு நிகராக பா.ஜ.க.வுக்கு ஆகாத தி.மு.க. முகம் என்றால் அது செந்தில் பாலாஜிதான். ஆனாலும், அமலாக்கத்துறை வழக்கால் ஒரு வருடத்துக்கு மேலே சிறையில் இருந்துவிட்டு வெளியே வந்த நிலையிலும், கோவை மற்றும் கரூரில் அவர் மீதான மக்கள் செல்வாக்கு அப்படியேதான் இருப்பதாக சர்வே கூறுவதால், அதை உடைக்கச் சொல்லியிருக்கிறாராம் ஷா.
அமைச்சர் சாமிநாதன் எந்த சலனமும் சர்ச்சையுமில்லாத ஆவரேஜான (average) அமைச்சராக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தி.மு.க. எதிர்ப்பு அலையை உருவாக்கினாலே அவரை ஜெயித்துவிடலாம் என்று ரிப்போர்ட் சொல்கிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். ஆனால், கயல்விழியின் செயல்பாடு மந்தம் என்றே சொல்லப்படுகிறது. தனது அதிகார எல்லையைக்கூட அவர் இன்னும் அறியாமல் இருப்பதாகவும், இதனால் பட்டியலின மக்கள் அவர் மீது ஆதங்கத்தில் இருப்பதாகவும் திமுகவினரே கொதி நிலையில் உள்ளதாக சர்வேயில் தெரியவந்துள்ளதாம்.
ஈரோடு முத்துசாமி 'பெரியவர்' என்கிற மரியாதையை கட்சியிலும், மக்களிடமும் பெற்றுள்ளாரே தவிர, ஈரோடு மாநகராட்சியில் நடக்கும் ஊழல்களையும், தன் பெயரைச் சொல்லி ஆட்டம் போடும் நபர்களையும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறது ரிப்போர்ட். இளம் அமைச்சரான நாமக்கல்லின் மதிவேந்தன் சொந்த மாவட்டத்தில் எம்.பி.யை தாண்டி அரசியல் செய்யமுடியாத நிலையில் பிலோ ஆவரேஜ்(Below average) அமைச்சராக பெயர் வாங்கியிருக்கிறாராம்.
சமீபத்தில் அமைச்சரான பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் பற்றி பிளஸ், மைனஸ் எதுவும் இல்லை. தர்மபுரியின் பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் அவ்வப்போது நிகழ்ச்சிகளில் தலைகாட்டுகிறார். அதனால் அந்த மாவட்ட தி.மு.க.வில் எந்த எழுச்சியுமில்லை என்றே ரிப்போர்ட் சொல்கிறதாம்.
கிருஷ்ணகிரியின் பொறுப்பு அமைச்சர் சக்கரபாணிக்கு அந்த தூரமே பெரிய அயற்சியாக இருப்பதாகவும், மேலும் கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்தபோது, அவர் பெயரைச் சொல்லி ஆட்டம் போட்ட வேடசந்தூர் டீம் கிருஷ்ணகிரியையும் கிறுகிறுக்க வைத்துக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி கடந்த ஒன்றரை வருடங்களாகவே வழக்கு, சிறை, ஜாமீன் என்று இருந்துவிட்டதால், அவருடைய சொத்துப் பட்டியலில் புது தகவல் எதுவும் இல்லையாம். ஆனால், மீதி ஏழு பேரில் ரெண்டு அமைச்சர்களின் சமீப வருட சொத்து விவரங்கள் மிரள வைப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இன்னும் மூன்று பேரோ வகையாக வளைத்துப் போட்டிருக்கிறார்களாம். ஒரு அமைச்சர், தன் தொகுதியின் நாடாளுமன்ற புள்ளியோடு கைகோத்து மெகா ப்ராஜெக்ட் ஒன்றை பைபாஸில் கட்டங்கட்டி பாஜகவிற்கே ஷாக் கொடுத்துள்ளராம்.
இதையெல்லாம் சம்பந்தப்பட்ட துறைக்கு ரீ டைரக்ட் பண்ணச் சொல்லி உத்தரவிட்டுள்ளாராம் அமித்ஷா. நிச்சயமாக கூடிய விரைவில் ரெய்டு பாயும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இந்த நிலையில், ஸ்கேன் செய்யப்பட்ட எட்டு அமைச்சர்களில் முத்துசாமி, செந்தில் பாலாஜி, சாமிநாதன் மூவரும்தான் கொங்கில் எங்களுக்கு சவாலாக இருக்கலாம். ஆக, இந்த மூன்று பேரையும் கட்டம்கட்டிதான் எதிர்ப்பு அரசியலை செய்யச் சொல்லியிருக்கிறார் அமித் ஷா என்று பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பா.ஜ.க. மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் கேட்டபோது, "கொங்கு மண்டலம் நிச்சயமாக தாமரைக்கு ஆதரவான நிலையில்தான் உள்ளது. எனவே, இங்கும் அதிக கவனமெடுத்து சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம். எட்டு அமைச்சர்கள் பற்றிய சர்வே டெல்லியால் எடுக்கப்பட்டதா, இல்லையா எனும் பட்டிமன்றத்துக்குள் நான் வரமுடியாது. ஆனால் ஒன்று.. இந்த மண்டலத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகம் முழுக்கவும் தி.மு.க. அமைச்சர்களின் செயல்பாடுகள் மிக மோசம்" என்றார்.
கவனிக்கிறோம் பாஸு!
What's Your Reaction?






