Maharaja: ஓடிடியில் புதிய சாதனை படைத்த மகாராஜா… விஜய் சேதுபதி மகிழ்ச்சி… சாந்தனு வருத்தம்!
விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கிய மகாராஜா திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸில் வெளியான இந்தப் படம், ஓடிடியிலும் சாதனைப் படைத்துள்ளது.
சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான மகாராஜா, பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. நித்திலன் சாமிநாதன் இயக்கிய இந்தப் படம் ஜூன் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியான படங்கள் பெரியளவில் ஹிட்டாகவில்லை. இதனால், மகாராஜா திரைப்படம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நான் லீனியரில் உருவான மகராஜா படத்தின் திரைக்கதை, ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்தது.
மகாராஜா வெளியாகி முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டியது. திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது மகராஜா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்தியா மொழிகளில் வெளியானதால், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் மகாராஜா படத்துக்கு நல்ல ரீச் கிடைத்தது. இதனையடுத்து இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் வாங்கினார்.
இந்நிலையில், நெட்பிளிக்ஸில் வெளியான இந்தியப் படங்களில் அதிக பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது மகாராஜா. 2024ம் ஆண்டில் இதுவரை ஏராளமான இந்திய மொழி படங்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளன. அவைகளில் மகராஜா 18.6 மில்லியன் பார்வைகளை கடந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்து இந்தி திரைப்படமான Crew 17.9 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாவது இடத்திலும், லாபத்தா லேடீஸ் 17.1 மில்லியன் பார்வைகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. முக்கியமாக மகாராஜா படத்தை இந்தியாவை கடந்த மற்ற நாட்டு ரசிகர்கள் தான் அதிகளவில் பார்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க - நாளை தவெக கொடி அறிமுகம்… விஜய்யின் மெகா பிளான்!
இதனிடையே மகாராஜா படத்தின் கதையை முதலில் சாந்தனுவிடம் தான் சொல்லியிருந்ததாக இயக்குநர் நித்திலன் சாமிநாதன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தில் நடிக்க சாந்தனு ரெடியாக இருந்தார். ஆனால் தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்க முடியாது என மறுத்துவிட்டனர். அதன் பிறகு தான் குரங்கு பொம்மை படம் இயக்கினேன். அந்தப் படம் வெளியான பின்னர் சாந்தனுவிடம் சொன்ன கதையை கொஞ்சம் மாற்றி, அதில் விஜய் சேதுபதி நடிக்க மகாராஜாவாக உருவானது எனக் கூறியிருந்தார்.
நித்திலன் சாமிநாதன் சொன்னது உண்மை தான் என ட்வீட் செய்துள்ள சாந்தனு, மாகாராஜா மிஸ் ஆனதில் வருத்தம் தான் என்றுள்ளார். அதேநேரம் இந்த கதையை அப்போது பல தயாரிப்பாளர்கள் நிராகரித்தனர். ஆனால் அதே கதையை படமாக எடுத்து சூப்பர் ஹிட் ஆக்கிய நித்திலன், கன்டென்ட் தான் எப்போதும் கிங் என நிரூபித்துள்ளதாக பாராட்டியுள்ளார். மேலும், மகாராஜா கதையை நித்திலன் என்னிடம் சொன்னது என் அப்பா பாக்யராஜ்க்குக் கூடத் தெரியாது. நல்ல கதையை நான் தேர்ந்தெடுத்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி தான். இப்போதும் நல்ல கதை கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் சாந்தனுவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
What's Your Reaction?