Ranjith : ஆணவக்கொலையை நியாயப்படுத்திய கவுண்டம்பாளையம் ரஞ்சித்... விசிக சார்பில் புகார்!

VCK Party case filed against Actor Ranjith : கவுண்டம்பாளையம் படத்தை இயக்கி நடித்துள்ள ரஞ்சித், ஆணவக்கொலை வன்முறை அல்ல, அக்கறை தான் என பேசி சர்ச்சையில் சிக்கினார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது விசிக சார்பில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Aug 12, 2024 - 23:32
Aug 13, 2024 - 15:06
 0
Ranjith : ஆணவக்கொலையை நியாயப்படுத்திய கவுண்டம்பாளையம் ரஞ்சித்... விசிக சார்பில் புகார்!
ரஞ்சித் மீது விசிக சார்பில் புகார்

VCK Party case filed against Actor Ranjith : ரஞ்சித் இயக்கிய கவுண்டம்பாளையம் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் வெளியான இத்திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் சுத்தமாக வரவேற்பு கிடைக்கவில்லை. கவுண்டம்பாளையம் நாடகக் காதலுக்கு எதிரான படம் எனக் கூறியிருந்த ரஞ்சித், ஆணவக்கொலை குறித்தும் சர்ச்சையான வகையில் பேசியிருந்தார். அதாவது ”ஆணவக்கொலை வன்முறை அல்ல, அது அக்கறை தான்” என அவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

ஆணவக்கொலை பற்றி கவுண்டம்பாளையம் படத்தில் பேசியுள்ளதாக தெரிவித்த ரஞ்சித். யாராவது நமது பைக்கையோ அல்லது செருப்பையோ எடுத்துவிட்டால் நமக்கு கோபம் வருவது இயல்பு. உடனே கோபத்தில் அவனை அடிப்பது போல் பெற்றவர்களுக்கும் அவர்களது குழந்தைகள் தான் உயிர். அதனால் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை போல எதாவது விபரீதமாக நடக்கும் போது எமோஷனலாக முடிவெடுக்கின்றனர். அந்த கோபம் அக்கறையாக வருவது தான், எனவே ஆணவக்கொலையை வன்முறையாக பார்க்க வேண்டாம், அது தங்களது மகள்கள் மீதான அக்கறை தான் எனக் கூறியிருந்தார்.   

இதனையடுத்து ரஞ்சித்தின் இந்த பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருந்தார். அதில், ஆணவக் கொலையை வன்முறையல்ல என்று சொல்வது அரசியல் அறியாமையாகவோ அல்லது வணிக நோக்கமாகவோ தான் இருக்க வேண்டும். ஆணவக் கொலையை நியாயப்படுத்தி திரைப்படமாக எடுத்து சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசுவதும் கருத்துகளை பரப்புவதும் நாட்டுக்கு நல்லது கிடையாது. ரஞ்சித் இதுபோன்ற கருத்துகளை பேசுவது கவலையளிக்கிறது என பேசியிருந்தார். 

இதுகுறித்து விளக்கம் கொடுத்திருந்த ரஞ்சித், நான் ஆணவக்கொலைக்கு ஆதரவாக பேசவில்லை. நான் சொல்ல வந்த கருத்து வேறு. ஆனால், நான் ஆணவக்கொலையை நியாயப்படுத்துவதாக சித்தரித்துவிட்டனர். காதலில் பாதிக்கப்படும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இருவருமே ஒரு தாய்க்கு குழந்தை தான். இவர்களில் எந்த குழந்தையாக இருந்தாலும் அவர்களின் அம்மா கண்ணீர் தான் சிந்துவார். நான் ஆணவக்கொலைக்கு ஆதாரவானவன் கிடையாது, இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள், நான் சட்டத்தை மதிப்பவன் எனக் கூறியிருந்தார்.    

இந்நிலையில், வன்முறையை தூண்டுகிற வகையில் பேசிவரும் நடிகர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்ககோரி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியசு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "நடிகர் ரஞ்சித் என்பவர் தான் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படத்தில், திட்டமிட்டு சமூக அமைதியை சீர்குலைக்கிற வகையிலும், ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிற சமூகங்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் எடுத்துள்ளார். 

மேலும் படிக்க - செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி

மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அவமானப்படுத்த அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடனும் பல்வேறு காட்சிகளை அந்த திரைப்படத்தின் டிரெய்லரில் வைத்துள்ளார். இது தொடர்பாக புகார் அளித்த பிறகு சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியாகியுள்ளது. ஆனால், சமீபத்தில் நடந்த பிரஸ் மீட் ஒன்றில் ரஞ்சித் ஆணவப் படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையிலும், அது தவறில்லை என பேசியிருப்பதும் கண்டிக்கத்தக்கது. மோசமான படுகொலைகளை ஆதரிக்கிற வகையிலும் ஊக்குவிக்குற வகையிலும் ரஞ்சித் பேசியுள்ளார். சட்டத்திற்கு புறம்பான வகையில் ரஞ்சித் பேசிவருவது மிகப்பெரிய ஒரு தீவிரவாத செயலாக தான் பார்க்க வேண்டும். அவர் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் மனுவில் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow