அரசுப் பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!
பண்ருட்டியில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்தில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண்ணை குறித்த இடத்தில் இறக்கி விடாமல் தகாத வார்த்தைகளால் திட்டியதாக பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையத்திலிருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு கட்டணமில்லா மகளிர் பேருந்தில் பட்டாம்பாக்கம் செல்வதற்காக பெண் ஒருவர் தனது கை குழந்தையுடன் பயணம் செய்துள்ளார். அப்போது நடத்துனரிடம் டிக்கெட் வாங்கிக் கொண்டு அந்தப் பெண் இறங்க வேண்டிய இடத்தை தெரிவித்துள்ளார்.
இதனை பெரிதும் கண்டுக்கொள்ளாத நடத்துனர் இலவச பேருந்து தானே என்கிற அலட்சியப் போக்குடன் பட்டாம்பாக்கத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர். இதனால் கைக்குழந்தையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த அந்தப் பெண்,நடத்துனர் மற்றும் ஓட்டுநரிடம் கேட்டபோது கண்டுக்கொள்ளாமல் அலட்சியப் போக்குடன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக அப்பெண் தெரிவித்துள்ளார். பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் தனது கைக் குழந்தையுடன் கடலூர் வரை பயணிக்க வேண்டிய அவல நிலை அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்டுள்ளது,
இச்சம்பவத்தை அந்தப் பெண் வேதனையுடன் தெரிவிக்கக் கூடிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. பெண்களுக்கான கட்டணமில்லா அரசு பேருந்தில் பயணம் செய்யும் பெண்களிடம் இதுபோன்று அலட்சியப் போக்குடன் நடந்து கொள்ளும் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Read more: பாம்பு பிடிக்க போன வீரருக்கு நேர்ந்த பரிதாபம்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
What's Your Reaction?






