தமிழ்நாடு

தொடரும் சோகம்.. சிறுத்தை தாக்கியதில் பெண்மணி உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் மைனலை அரக்காடு கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் அஞ்சலை என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணியை சிறுத்தை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடரும் சோகம்.. சிறுத்தை தாக்கியதில் பெண்மணி உயிரிழப்பு!
நீலகிரியில் தொடரும் சோகம்.. சிறுத்தை தாக்கியதில் பெண்மணி உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் தும்மனாட்டி ஊராட்சிக்குட்பட்ட ஜே.பாலகொலா பொம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கோபால், அஞ்சலை தம்பதியினர். அஞ்சலை என்பவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

நேற்று பகல் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வந்த அஞ்சலை வீடு திரும்பாத நிலையில், அவரது உறவினர்கள் அஞ்சலையை பல இடங்களில் தேடியுள்ளனர். அஞ்சலை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இன்று (மார்.13) காலை மைனலை அருகே இருக்க கூடிய அரக்காடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிப்பதற்காக வந்த வட மாநில தொழிலாளர்கள் சென்றுள்ளனர். 

தேயிலை தோட்டத்தில் பெண்மணி ஒருவர்  வனவிலங்கு தாக்கி உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பெயரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். வனத்துறையினரின் விசாரணையில் அஞ்சலை என்பவரை தாக்கியது சிறுத்தை என்று உறுதியாகியுள்ளது. 

தற்போது, அப்பகுதியில் சுற்றித் திரியும் வனவிலங்கு  சிறுத்தையை பிடிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் வடமாநில தொழிலாளியின் குழந்தையை சிறுத்தை அடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழலில் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில்,  சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.