கடந்த சில நாட்களாகவே மும்மொழி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும், தமிழ்நாடு அரசிற்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த 10-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கேள்வி எழுப்பிய திமுக எம்.பிக்களை அநாகரீகமானவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்தார். இதனால் ஆத்திரமடைந்த திமுக எம்.பிக்கள் மத்திய அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்று (மார்ச் 11) மாநிலங்களவையில் நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கை மீதான விவாதத்தின் போது ‘தான் பேசியது யாரின் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 100 முறை கூட மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன்’ என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
தர்மேந்திர பிரதான் பதிவு:
இந்நிலையில், பிஎம்-ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு கல்வி துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “பிஎம்-ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்தியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர் ஸ்டாலினும் என்மீது குற்றச்சாட்டை சுமத்தியிருந்தனர்.
நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தில் நான் உறுதியாக உள்ளேன். கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 15 தேதியிட்டு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய ஒப்புதல் கடிதத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர் ஸ்டாலினும் எவ்வளவு பொய்களை அடுக்கினாலும் உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். தமிழ்நாட்டு மக்களின் ஏராளமான பிரச்சினைகளுக்கு திமுக தீர்வு காணவேண்டியுள்ளது. அதனை திசை திருப்பும் உத்தியாகவே மொழிகுறித்த பிரச்சினையை திமுக கையில் எடுத்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை குறித்த நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் நிச்சயம் அரசியல் லாபங்களுக்காகவும், அரசியல் எதிர்காலத்தை மீட்டெடுப்பதற்காகவும் மட்டும்தான். திமுக அரசின் இந்த பிற்போக்கு அரசியல், தமிழக மாணவர்களின் வள மான எதிர்காலத்துக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிப்பதாக அமையும்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் லாபத்தை தவிர்த்து தமிழகத்தில் உள்ள நமது குழந்தைகள் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அன்பில் மகேஷ் விளக்கம்:
தேசிய கல்விக் கொள்கை குறித்து அன்பில் மகேஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தவறான தகவல்களை பரப்புவதால் உண்மைகள் மாறிவிடாது. தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.எங்கள் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் இல்லை.
தமிழக அரசின் 2024 மார்ச் 15-ம் தேதியிட்ட கடிதமும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக இல்லை. மாணவர்களுக்கு நன்மை பயக்கும்போது மட்டுமே மத்திய அரசின் திட்டங்களை ஏற்கிறோம். அதற்காக அனைத்து திட்டங்களையும் கண்மூடித்தனமாக ஏற்க முடியாது. அந்த கடிதத்தில், ஒரு குழு அமைக்கப்பட்டு அதன்பரிந்துரைகளின்படி திட்டத்தில் சேருவது குறித்து முடிவு செய்வோம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், தேசிய கல்விக் கொள்கையை திணித்து தமிழகத்தின் கலாச்சாரத்தையும், மரபையும் சிதைக்க முயற்சிப்பவர்கள்தான் தற்போது அரசியல் செய்கின்றனர். தமிழக குழந்தைகள் நலனுக்கு எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமையை அங்கீகரித்து ஆதரிப்பதன் மூலம் நீங்கள் தமிழகத்தின் எதிர்காலத்துக்கும் சிறந்த சேவையை செய்கிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Yesterday, DMK MPs and Hon’ble CM Stalin accused me of misleading the Parliament regarding Tamil Nadu’s consent for establishment of PM-SHRI Schools.
— Dharmendra Pradhan (@dpradhanbjp) March 11, 2025
I stand by my statement made in the Parliament and am sharing the consent letter from Tamil Nadu School Education Department… pic.twitter.com/vp6GtPEp1q