பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடிகரை கைது செய்ய இடைக்கால தடை!

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

Sep 30, 2024 - 21:00
 0
பாலியல் புகாரில் சிக்கியுள்ள நடிகரை கைது செய்ய இடைக்கால தடை!

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றச்சாட்டப்பட்டனா். இதைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த பிரச்சினைகளை ஆய்வு செய்வதற்காக, நீதிபதி ஹேமா தலைமையில் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. இதனையடுத்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்பித்தது ஹேமா கமிட்டி.

அந்த அறிக்கையில் மலையாள திரை உலகத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் பயம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எதிர்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. சூட்டிங் செல்லும் இடத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களைத் தவிர்க்கவே பலர் தங்கள் பெற்றோரை அல்லது உறவினர்களை உடன் அழைத்துச் செல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

சூட்டிங் செல்லும் இடங்களில் நடிகர்கள் ஹோட்டல் அறைகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயல்வது உட்பட பல மோசமான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளன. இவ்வளவு மோசமான நிலைமை இருந்தும் இதுகுறித்து பலரும் புகார் அளிப்பதில்லை. படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம் காரணமாகவும், சமூகத்தில் என்ன நினைப்பார்களோ என்ற அச்சம் காரணமாகவும் பாலியல் சுரண்டலில் ஈடுபவர்களுக்கு எதிராக பலரும் புகாரளிக்கத் தயங்குகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கேரளா சினிமா துறையில் சில கிரிமினல்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்காக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நடிகைகளை அட்ஜெஸ்மெண்ட் செய்ய வலியுறுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மலையாள திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு சம ஊதியம் என்பது வழங்கப்படுவதில்லை. அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி கூட நடிகைகளுக்கு இல்லை. சூட்டிங்கின் போது பெண்கள் தண்ணீர் குடிப்பதையே தவிர்த்து விடுகிறார்களாம் என்றெல்லாம் கமிட்டி அளித்த அறிக்கையில் கூறப்பட்டது பரபரப்பை கிளப்பியது.

இதனையடுத்து இச்சம்பவம் குறித்து கேரள அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அதேபோல், மலையாள முன்னணி நடிகர்கள், நடிகைகள் சிலரும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து, மலையாள நடிகர் சங்க தலைவரான மோகன்லால் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வந்தன. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் நடிகர் சங்க அமைப்பான ‘அம்மா’-வில் இருந்து தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால். இந்த சங்கத்துக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. அப்போது அம்மா சங்கத்தின் தலைவராக மோகன்லாலும், செயலாளராக எடவேல பாபுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், மோகன்லால் தலைமையிலான அம்மா சங்கத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகள், மலையாள திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கிய திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்தார் மோகன்லால். நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தில், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் திலீப். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் திலீப்புக்கு ஆதரவாக மோகன்லால் செயல்பட்டது சர்ச்சையானது. 

மோகன்லால் மட்டுமின்றி மம்முட்டி போன்ற மூத்த நடிகர்களும் திலீப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. மலையாள நடிகர் சங்கத்துக்கு திலீப் பலவிதங்களில் உதவியதாகவும், மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு தனிப்பட்ட முறையில் அவர் மிகவும் நெருக்கம் என்றும் கூறப்படுகிறது. இதனால் பலரது எதிர்ப்பையும் மீறி திலீப்பை நடிகர் சங்கத்துக்குள் மீண்டும் கொண்டு வந்தார் மோகன்லால். இதன் காரணமாக மோகன்லாலை நடிகைகள் பலரும் வெளிப்படையாக கண்டித்தனர், மேலும் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கூட்டங்களிலும் இந்த எதிர்ப்பு காணப்பட்டது. இந்த சூழலில் தற்போது ஹேமா கமிட்டி அறிக்கையும் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், பதவிக்காலம் முடியும் முன்பே அம்மா சங்கத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் மோகன்லால். மேலும், இவரைத் தொடர்ந்து மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த நடிகர் சித்திக், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து, சித்திக் மீது பிரபல நடிகை அளித்த புகாரின் பேரில், சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஸ்கட் ஹோட்டலில் 2016 ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடிகை அளித்த புகாரில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மூத்த மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க: ”இந்த ஆண்டு இயல்பை விட அதிக மழையாம்” - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்

இதனையடுத்து முன் ஜாமின் பெறுவதற்காக கேரள உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் சித்திக். ஆனால் செப் 24ம் தேதி அவருக்கு முன் ஜாமின் வழங்க மறுக்கப்பட்டதால், அவர் தலைமறைவானார். இதனையடுத்து லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தன்னை கைது செய்வதற்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார் சித்திக். இந்த வழக்கு இன்று (செப் 30) விசாரணைக்கு வந்த நிலையில், சித்திக்கை கைது செய்வதற்கு இடைக்கால தடை வதித்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow