அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது.. தயாரிப்பாளர் எஸ்.தாணு கொடுத்த மாஸ் அப்டேட்
வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ’வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தயாரிப்பாளர் எஸ். தாணு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
கடந்த 2007-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் வெற்றிமாறன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, 'ஆடுகளம்', 'அசுரன்', 'விடுதலை' போன்ற பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் முன்னணி இயக்குநராக உயர்ந்தார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை 2’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க: மீண்டும் வரும் ‘ஜெயிலர்’.. சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.
’விடுதலை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு காரணமாக ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால், ‘வாடிவாசல்’ திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
மேலும் படிக்க: கேரளாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 60 பேரில் 44 பேர் கைது
இந்நிலையில், ‘வாடிவாசல்’ திரைப்படம் குறித்து வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் எஸ்.தாணு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘அகிலம் ஆராதிக்க "வாடிவாசல்" திறக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூர்யா உடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘பேட்டைக்காரன்’ திரைப்படத்தில் சூர்யா நடித்து வரும் நிலையில் இப்படத்தை முடித்த கையோடு வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?