மீண்டும் வரும் ‘ஜெயிலர்’.. சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு
நடிகர் ரஜினி நடிப்பில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, விநாயகன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘காவாலா’ பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடியிருந்தார். இந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.
இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. இந்த பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ’ஜெயிலர்’ இரண்டாம் பாகம் இயக்க இயக்குநர் நெல்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல், தற்போது ரஜினி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருவதால் அதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.
மேலும் படிக்க: அரசியல் கோமாளி அண்ணாமலை.. அமைதி காக்கும் பழனிசாமி- கீதா ஜீவன் விளாசல்
கடந்த இரு தினங்களுக்கு முன்பு சன்பிக்சர்ஸ் நிறுவனம் புதிய படத்தின் டீசர் இன்று வெளியாகும் என அறிவித்திருந்தது. இது ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் டீசராக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், 'ஜெயிலர் 2’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் டீசர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் நெல்சனும், இசையமைப்பாளர் அனிருத்தும் அமர்ந்து பேசுவது போன்று தொடங்கும் இந்த நான்கு நிமிட டீசரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். மேலும், ‘ஜெயிலர் 2’ குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க: கேரளாவில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 60 பேரில் 44 பேர் கைது
’ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களே இதிலும் பணிபுரிய உள்ளார்கள் என்றும் ரஜினியுடன் வேறு யாரெல்லாம் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்பது விரைவில் தெரியவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?