பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்ட விவகாரம்.. அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்..!
பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில், தமிழக வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர் மீதான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விளையாட்டு வீரர்கள் மீது நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தேசிய அளவிலான கபடிப் போட்டிகள் பெண்கள் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. 2024-2025 ஆண் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்களுக்கான கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து அந்த வகையில் தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம்,பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட நான்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த வீராங்கனைகள் கபடித் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், தமிழகத்தின் அன்னை தெரசா பல்கலைக்கழகமும், பிஹார் மாநிலம் தர்பாங்கா பல்கலைக்கழகமும் மோதியது. அப்போது நடுவர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகவும், அதற்கு எதிராக கேள்வி எழுப்பிய தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சேர்களை வீசி கொடூர தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், கபடி வீராங்கணைகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஃபவுல் அட்டாக் குறித்து முறையிட்ட போது தமிழக வீராங்கனைகள் மீது நடுவர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடந்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கத என்றும், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளரின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின் போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டிருப்பதாகவும், பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக வீராங்கனைகள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்
தமிழ்நாட்டு வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்திய தற்குறிகள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கோப்பையை வாங்கி வந்த பிறகு கோடிகளை கொடுப்பதை விட,விளையாடும் வீரர்களுக்கு அளிக்கும் பாதுக்காப்பு கோடிகளை விட பெரியது! தமிழ் மண்ணில் பிறந்த பிள்ளைகளை களத்தில் வெல்ல முடியாமல் கண்மூடித்தனமாக அடித்து அவமானப்படுத்திய காட்சிகள் ஒட்டுமொத்த மக்களிடமும் பெருங்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது!
தமிழ்நாட்டு வீராங்கனைகளை தலைகுனிவிற்கு தமிழ்நாடு அரசு என்ன பதில் சொல்ல போகிறது? பிகார் மாநில வீரர்கள்-பஞ்சாப் மாநில பார்வையாளர்கள் என இருவரும் இணைந்து தமிழ்நாட்டு வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி அவர்களின் சாதனைகளில் ஒன்றாக எடுத்துக் கொள்ள போகிறாரா?
அடுத்த மாநிலத்திற்கு செல்லும் வீரர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய மறுத்து விட்டதா விளையாட்டுத் துறை? அனைத்து வீராங்கனைகளுடன் தமிழ்நாடு அரசு நிற்கவில்லை என்றாலும் தமிழ் மண்ணும்-மக்களும் நிற்பார்கள்! என்று எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
அமமுக தலைவர் டி.டி.வி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்ந்து தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, "பஞ்சாப்பில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாடு கபடி வீராங்கனைகளை பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; வீராங்கனைகள் டெல்லியில் தங்க வைக்கப்பட்டு, நாளை ரயில் மூலம் தமிழ்நாடு திரும்புகின்றனர்" என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?