காவி உடை தரித்த திருவள்ளுவர்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆர்.என்.ரவி

திருவள்ளுவர் தினத்தையொட்டி காவி உடை தரித்த திருவள்ளுவர் உருவ படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Jan 15, 2025 - 16:00
 0
காவி உடை தரித்த திருவள்ளுவர்.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆர்.என்.ரவி
திருவள்ளுவர் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் மாட்டு பொங்கல், திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி திருவள்ளுவர் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  திருவள்ளுவர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள பதிவில், “பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் மற்றும் மிகுந்த பயபக்தியுடனும் நினைவுகூர்கிறது. 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை  வழங்கினார். பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். 

மேலும் படிக்க: அடுத்து வரும் ஆறு நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்யும்.. வானிலை அப்டேட்

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார். இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும்.  திருவள்ளுவரின் சிறந்த பக்தரான பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி, திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, காவி உடை தரித்த திருவள்ளுவர் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தினார். இது தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த ஆண்டும் அதேபோன்று நெற்றியில் பட்டையுடன் காவி உடை தரித்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தி இருக்கிறார். ஏற்கனவே, தமிழ்நாடு அரசிற்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த செயல்கள் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் போது தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வந்த மூன்று நிமிடத்தில் பேரவையை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow