சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம், கடந்த மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாரி செல்வராஜ்ஜின் ஆட்டோ பயோபிக் மூவியாக உருவாகியுள்ள வாழையை பிரபல இயக்குநர்கள் பலரும் பாராட்டியிருந்தனர். அதேபோல், ரசிகர்களிடம் இருந்தும் இப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்திருந்தன, இந்நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழை படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
அதில், “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ்ஜுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத் தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக் கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக்கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சிப் பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ்ஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்!” என பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், “என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து, இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க - அறிவு இருக்கா... ஆவேசமாக பொங்கிய ஜீவா!
மாரி செல்வராஜ்ஜின் முந்தைய படமான மாமன்னனில் உதயநிதி ஹீரோவாக நடித்திருந்தார். முழுநேர அரசியலில் களமிறங்கிய பின்னர் உதயநிதி நடித்த கடைசிப் படமாக மாமன்னன் வெளியானது. உதயநிதியுடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களைப் போல மாமன்னனுக்கும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக உதயநிதி நடிப்பில் வெளியான படங்களில் மாமன்னன் தான் அவருக்கு ரசிகர்களிடம் பெயர் வாங்கிக் கொடுத்தது.
மாமன்னன் வெளியாகும் முன்பே வாழை படத்தை இயக்கத் தொடங்கினார் மாரி செல்வராஜ். அப்போது இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், வாழை படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் திரையரங்கில் வெளியிட்டது. மினிமம் பட்ஜெட்டில் உருவான வாழை, இதுவரை 15 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழை திரைப்படம், விரைவில் ஓடிடி தளத்திலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.