'அறிவு இருக்கா'.. ஆவேசமாக பொங்கிய ஜீவா.. பதில் கேள்வி எழுப்பிய சின்மயி.. என்ன நடந்தது?

முன்னதாக 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்திடம், செய்தியாளர்கள் கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியபோது, ''சாரி.. அதுபற்றி எனக்கு தெரியாது'' என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Sep 1, 2024 - 20:42
Sep 2, 2024 - 10:09
 0
'அறிவு இருக்கா'.. ஆவேசமாக பொங்கிய ஜீவா.. பதில் கேள்வி எழுப்பிய சின்மயி.. என்ன நடந்தது?
Actor Jeeva And Chinmayi

சென்னை: கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு தமிழ், மலையாள முன்னணி நடிகை ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதன்பின்பு மலையாள திரையுலகில் நடிகைகள் உள்பட அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ம் ஆண்டு கேரள அரசு கமிஷன் அமைத்தது. 

நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தங்களது அறிக்கையை கேரள அரசிடம் சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் அதிரடியாக பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

முன்னணி இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன், நடிகர்கள் ஜெயசூர்யா, ரியாஸ் கான், நடிகரும் எம்எல்ஏவுமான முகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பல்வேறு நடிகைகள் அடுத்தடுத்து பாலியல் புகார்களை கூறி வருகின்றனர். இதனால் புகார்களால் மலையாள நடிகர் சங்கத் தலைவர் மோகன் லால் உட்பட 17 உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். 

கேரளாவை போன்று தமிழ்நாடு திரையுலகிலும் பாலியல் சம்பவ புகார்கள் உள்ளதாக நடிகை ஷகிலா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தேனி-மதுரை சாலையில் உள்ள ஜவுளிக்கடை திறப்பு விழாவில் நடிகர் ஜீவா பங்கேற்றார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் மலையாள திரையுல பாலியல் புகார்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள். 

முதலில் இந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்த ஜீவா, அதன்பிறகு, 'எல்லா துறைகளிலுமே இதுபோன்ற புகார்கள் இருக்கிறது. இதற்கு பதில் சொல்லவில்லை. அத்துடன் தமிழ் திரையுலகில் பாலியல் புகார்கள் இல்லை ' என்று கூறி நழுவிச் செல்ல முயன்றார்.  ஆனாலும் செய்தியாளர்கள் தொடர்ச்சியாக விடாமல் 'நீங்கள் நடிகர் என்பதால் தான் இந்த கேள்வியை கேட்டோம்' என்றனர். இதனால் ஆவேசம் அடைந்த அவர் கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவரிடம், ''உனக்கு அறிவு இருக்கா?" நான் இங்க எதுக்கு வந்திருக்கேன். எங்க வந்து என்ன கேள்வி கேட்கிற'' கூறி விட்டு அங்கு இருந்து சென்றார்.

பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகர் ஜீவாவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ''சினிமாவில் இருக்கும் ஜீவாவிடம் பக்கத்து மாநில திரையுலகில் நடக்கும் சம்பவத்தை தான் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை என்றால் அவர் அமைதியாக சென்று இருக்கலாம். ஆனால் கோபப்பட்டது மிகவும் தவறு'' என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜீவாவுக்கு பிரபல பின்னணிப் பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜீவா பேசிய வீடியோவை தனது 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்த சின்மயி, ''தமிழ் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் இல்லை என்று எப்படிச் சொல்கிறார்கள்? என்பது எனக்குப் புரியவில்லை. எப்படி?'' என்று தெரிவித்துள்ளார். முன்னதாக 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்திடம், செய்தியாளர்கள் கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியபோது, ''சாரி.. அதுபற்றி எனக்கு தெரியாது'' என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow