எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும்- சசிகலா ஆதங்கம்
எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும் என்றும் அப்போது தான் நாட்டுக்கு நல்லது என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியில் திமுகவினர் ஆதிக்கம் செலுத்தியதாக எழுந்த விமர்சனம் தொடர்பான கேள்வி குறித்து சசிகலா பேசியதாவது, குடும்ப ஆதிக்கம் இப்போது தான் தெரிகிறதா? மொத்த அரசாங்கமும் அப்படி தான் உள்ளது. இதனால் அதிகாரிகளுக்கு மரியாதையே இல்லை. எஉங்கள் நண்பர்கள் வந்தால் பின் இருக்கையில் அமர வைத்துக் காட்டுங்கள். எதிர்க்கட்சி என்றால் ஆளுங்கட்சியை தட்டிக் கேட்க வேண்டும், அப்போது தான் பணி நடக்கும்.
எதிர்க்கட்சி என்பவர்கள் எதிரி கட்சியாக இருக்க வேண்டும், அப்போது தான் நாட்டுக்கு நல்லது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இப்போது வரை அவர்கள் என்ன செய்தார்கள் என்று வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். காவல்துறை சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அரசியல் தலையீடு இருக்க கூடாது. காவல்துறையை செயல்படவிடுவதில்லை. மக்களை போல் காவல்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இப்பொழுது யாராவது புகார் கொடுக்க சென்றாலே மேலே இருப்பவர் வரை சென்று விடுகிறது. அதை தடுக்க பார்க்கிறார்கள். ஏன் ஆட்சியரை பாருங்கள் அவரையே நானாக எழுந்து கொண்டேன் என்று சொல்ல வைக்கிறார்கள். அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நல்லபடியாக செய்வோம், மக்களுக்காக நாங்கள் செய்து ஆக வேண்டும். 2026 -இல் திமுக நினைப்பது போல் இல்லை, நீங்கள் பார்ப்பீர்கள் எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது.
திமுக அரசு கேளிக்கை போன்ற விஷயங்களுக்கு அதிக பிரபலம் செய்கிறது. 10 பேருக்கு நன்மை அல்லது 10 ஆயிரம் பேருக்கு நன்மை என்றால் நானாக இருந்தால் 10 ஆயிரம் பேருக்கான நன்மை தான் செய்வேன். தமிழ்நாட்டு மக்களுக்கு மூளையே இல்லை அதனால் நாம் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள். திமுகவில் முன்பு கலைஞர் வீட்டுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக தேர்தல் அறிக்கையில் கொடுத்து பின் செய்ய முடியவில்லை என்று சொன்னார்.
தெருவில் போகிறவர் போல் ஒரு முதலமைச்சர் பேசக் கூடாது எது செய்ய முடியும் என்று பேச வேண்டும். இப்போது இதை தான் திமுக செய்கிறது. இவர்கள் செய்ய முடியாததை வேறு பக்கம் உடனே திருப்பி விடுவார்கள். நியாயமான விஷயங்களை திமுகவில் எதிர்பார்க்கவே முடியாது, ஒரு ஜல்லிக்கட்டை சரியாக நடத்த முடிகிறதா? அதிகாலை முதல் காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு தண்ணீர் கூட கிடைப்பதில்லை.
டோக்கன் கொடுக்கும் போதே இத்தனை மணிக்கு வர வேண்டும் என்று பகுதி பகுதியாக பிரித்துக் கொடுத்தால் இது எல்லாம் நடக்காது, பலரை திருப்பி விட்டு விடுகிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு தண்ணீர் கூட முறையாக கொடுக்க வக்கில்லாத ஆட்சியாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
What's Your Reaction?