சென்னை ராயப்பேட்டை பகுதியில் பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிகள், பெண்களிடம் தகாத முறையில் நடந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள கல்லூரியில் பயிலும் 20 வயது பெண்மணி ஒருவர் தனது கல்லூரி தோழிகளுடன் நேற்று மதியம் ஸ்பென்சர் பிளாசா பேருந்து நிறுத்தத்திலிருந்து மாநகர பேருந்தில் ஏறி சென்று கொண்டிருந்தபோது, ஒரு நபர் வேண்டுமென்றே கல்லூரி பெண்களை இடித்துக் கொண்டு இடையூறு செய்தபோது, மேற்படி பெண் உள்ளிட்ட கல்லூரி மாணவிகள் அந்த நபரை தள்ளி நில்லுங்கள் எனக் கூறியபோது, அந்த நபர் ஆபாசமான வார்த்தைகளால் பேசி, ஒரு மாணவியை கையால் தாக்கியும், தடுக்க சென்ற மேற்படி மாணவியின் ஆடையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், ஜெமினி மேம்பாலம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது, அந்த நபர் ஓடும்போது மாணவிகள் சத்தம் போடவே, அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அந்த நபரை பிடித்து ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.பின்னர் மாணவிகள் இச்சம்பவம் குறித்து புகார் கொடுத்ததின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர் சையது அப்துல் ரஹ்மான்(40) என்பதும், சையது அப்துல் ரஹ்மான் மேற்படி பேருந்தில் செல்லும்போது மாணவிகளிடம் அத்துமீறி தகாத முறையில் நடந்து தாக்கியதும் தெரியவந்தது.
அதன்பேரில், ராயப்பேட்டை அனைத்து மகளிர் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சையது அப்துல் ரஹ்மான் என்பவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சையது அப்துல் ரஹ்மான் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
Read more: திமுக அரசுக்கு அவமானமாக இருக்காதா?...தொடர் கொலைகள் – இபிஎஸ் கண்டனம்