பெரியார்-அம்பேத்கரை நேர்கோட்டில் நிறுத்தாதவர்களை மூளை உள்ளவராக கருதக்கூடாது- ஆர்.ராசா

பெரியாரையும், அம்பேத்கரையும் நேர்கோட்டில் நிறுத்தாத எவனும் மூளை உள்ளவனாக கருதக்கூடாது என்று திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.ராசா தெரிவித்துள்ளார்.

Jan 18, 2025 - 15:11
 0
பெரியார்-அம்பேத்கரை நேர்கோட்டில் நிறுத்தாதவர்களை மூளை உள்ளவராக கருதக்கூடாது- ஆர்.ராசா
ஆர்.ராசா-பெரியார்-அம்பேத்கர்

திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு இன்று (ஜன.18) சென்னை அமைந்தகரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் இந்த மாநாட்டை திமுகவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதாவது, நிலத்தால் திராவிடம் வரையறுக்கப்பட்டது ஒரு காலத்தில். நிலத்தால் மொழியால் வரையறுக்கப்பட்ட திராவிடம் வாழ்ந்தது. பண்பாட்டில் நீர் துவங்கி உண்ணும் உணவு வரை திராவிடம் அடையாளமாக இருந்தது.  திராவிடம் இல்லை என்று சொல்பவர்கள் ஆரியம் இல்லை என்று சொல்கிறார்களா? நிர்மலா சீதாராமன் வரை ஆரியம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்கள். 

ஆரியம் என்ற வரலாற்றையும் பண்பாட்டையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். ஆக ஆரியம் இருக்கிற காரணத்தினால் திராவிடம் மறுக்க வேண்டுமா? ஆரியமும் திராவிடமும் இந்த மண்ணில் இரண்டு பண்பாட்டுக் கூறுகள் என்பதை வரலாற்று தரவுகளோடு உறுதிப்படுத்தியுள்ளனர். ஒரு பண்பாடு தமிழை அடிப்படையாகக் கொண்ட திராவிட பண்பாடு. மற்றொரு பண்பாடு சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாடு. 

பெரியாரை விமர்சிப்பதற்கு ஒரு நாணயம் வேண்டும்.  அந்த நாணயம் எதிர்த்தரப்பில் எவனுக்கும் இல்லை. பெரியார் ஒரு ஆணாகப் பிறந்து பெண்ணுக்காக போராடியவன். முதலாளியாகப் பிறந்து தொழிலாளிக்கு போராடியவன். உயர்ந்த சாதிகள் பிறந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடியவன் பெரியார். இப்படி ஒரு அடையாளத்தில் இந்தியாவில் இன்னொரு தலைவன் இல்லை. 

தற்பொழுது திராவிடம் என்பது எங்களது கருத்துகள். பெரியாரையும் அம்பேத்கரையும் நேர்கோட்டில் நிறுத்தாத எவனும் மூளை உள்ளவனாக கருதக்கூடாது. Graded inequality, deprivation of education, ban on property, பெண்ணுக்கு உரிமை கொடுக்காதே இந்த நான்கும் தான் இந்துத்துவாவின் தத்துவம் என்று அம்பேத்கர் கூறுகிறார்.

மத தத்துவத்தை கொண்டு வந்தது ஆரியம். இந்த நான்கு கொள்கைகளையும் ஆதரித்தது ஆரியம். இதை மறுத்தது திராவிடம் மற்றும்  பெரியார், அம்பேத்கர். இப்போதைய காலகட்டத்தில் ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டால் ஆரியம், சமத்துவம் பேசினால் திராவிடம். பெண்ணுரிமை பேசினால் திராவிடம், பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பேசினால் ஆரியம். அறிவியல் பேசினால் திராவிடம், மூடநம்பிக்கை பேசினால் ஆரியம்.

திராவிடம் என்பது வெறும் சமூக நீதி மட்டும் அல்ல.  மதம் சாதி ஒழிந்த ஒரு தமிழ் சமுதாயம் இந்த மண்ணில் இருந்தது. அந்த மாண்பை மீட்டெடுப்பது தான் திராவிடம். திராவிடம் என்பது மொழிக்கான பெருமையும் கூட. இந்த மொழி தான் சமத்துவம் பேசியது. இந்த மொழி தான் அறிவியல் பேசியது. இந்த மொழி தான் அறிவியல் கூறுகளைக் கொண்டது. இது சமஸ்கிருதத்தில் இல்லை ஆரியத்தில் இல்லை. ஆரியத்தில் இல்லாத காரணத்தினால் இது திராவிட நெறி.  இந்த திராவிட நெறிதான் எங்களுக்கு அடையாளம். இதுதான் திராவிடயியல் என்று பேசினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow