அரசியல்

திமுகவிற்கு இன்னும் 15 அமாவாசை தான்... முன்னாள் அமைச்சர்கள் விமர்சனம்....

பிரதமரிடம் தமிழகத்திற்கு நிதி வாங்க சென்றாரா? அல்லது தனது மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்க ஆசிவாங்க சென்றாரா? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவிற்கு இன்னும் 15 அமாவாசை தான்... முன்னாள் அமைச்சர்கள் விமர்சனம்....
திமுகவிற்கு இன்னும் 15 அமாவாசை தான்... முன்னாள் அமைச்சர்கள் விமர்சனம்

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம்,  திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றிய கழகத்தின் சார்பில் அதிமுகவின் வளர்ச்சிப் பணி குறித்தும், மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர். பி.உதயகுமார், மற்றும் கே.டி. ராஜேந்திரபாலாஜி ஆகியோர் ஆலோசனை வழங்கினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “இன்றைக்கு முல்லை பெரியார், காவிரி, பாலாறு, கச்சத்தீவு போன்ற உரிமைப் பிரச்சனைகளுக்கு கேள்வி கேட்க நாதி இல்லை, 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் நமது உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. பள்ளி கல்விக்கு நிதி ,மெட்ரோ நிதி போன்றவற்றை மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தர அரசுக்கு யோக்கியதை இல்லை, அதே போல் மீனவர் பிரச்சனையை தீர்க்க முதலமைச்சருக்கு திராணி இல்லை. 

இன்றைக்கு (செப். 27) பாரத பிரதமர் மோடியை, முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து, தமிழகத்துக்கு வர வேண்டிய கல்வி நிதி, வெள்ள நிதி, ஜிஎஸ்டி, ஆகியவற்றை எடுத்து சொல்லுவாரா இல்லை தனது புதல்வனுக்கு துணை முதலமைச்சராக்க அனுமதி பெறுவாரா? தமிழக உரிமைக்காக பேசுவாரா இல்லை, தனது மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்க ஆசி பெறுவாரா? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் . மீண்டும் மக்கள் பிரச்சனை தீர ஒரே வழி 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலர வேண்டும்” எனப் பேசினார்.

இவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி,  திமுகவிற்கு இன்னும் 15 அமாவாசை தான், அதனை தொடர்ந்து எடப்பாடியார் தலைமையில் தமிழகத்தில் பௌர்ணமி மலரும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிக்ஸி கிரைண்டர் திட்டம், தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம், அம்மா பரிசுப் பெட்டகம் போன்ற திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். அதேபோல் எடப்பாடியார் 7.5 இட ஒதுக்கீடு கொண்டு வந்து அரசு மாணவர்களை பயன்பெறவைத்து அதற்கு நிதியை கூட அரசு தரப்பில் வழங்கினார் .ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை உருவாக்கினார். குறிப்பாக காமராஜர் பிறந்த விருதுநகரிலும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்திலும் உருவாக்கினார்.

குறிப்பாக எடப்பாடியார் ஆட்சியில் குடிமராமத்து பணி செய்யப்பட்டன, ஆனால் தற்போது எந்த பணியும் திமுக ஆட்சியில் நடைபெறவில்லை. மக்களை ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் திமுக கூட்டமாகும். ஆனால் மக்களுக்காக உழைக்கும் இயக்கம் அதிமுகவாகும். இன்றைக்கு மின்சார கட்டணம், சொத்துவரி ஆகியவற்றை உயர்ந்து விட்டன. ரேஷன் கடையில் பருப்பு இல்லை, சமையலுக்கு எண்ணெய் இல்லை, மண்ணெண்ணெய் இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. 1000 பேருக்கு வழங்கும் பொருட்களை 100 பேருக்கு மட்டும்தான் ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குகிறார்கள். ரேஷன் பொருள் எல்லாம் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. அதிமுக தொண்டர்கள் இதுபோன்று ஏழை, எளிய மக்கள் வயிற்றில் அடிக்க மாட்டார்கள். ஏனென்றால் நாங்கள் உழைத்து பிழைக்கும் கூட்டம். இதைத்தான் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி அம்மா முதல் தற்போது எடப்பாடியார் வரை ஆகியோர எங்களை வழி நடத்தி வந்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க: க்யூட் பேபியாக மாறிய சாய் பல்லவி... அமரன் படத்தில் மெர்சல் காட்டும் சிவகார்த்திகேயன்!

2026 சட்டமன்றத் தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க ரெடி என்று திமுகவினர் கூறி வருகிறார்கள். 2011ம் ஆண்டில் இதைத்தான் கடைபிடித்து தோல்வியை பெற்றார்கள். அதே நிலை தற்போது மீண்டும் வரும். எடப்பாடியார் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார். ஸ்டாலினோ ஏமாற்றம் இருக்காது மாற்றம் இருக்கும் என்று கூறுகிறார். உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கிக் கொள்ளுங்கள். இன்னும் 15 அமாவாசைதான் உங்களுக்கு உண்டு. அதைத் தொடர்ந்து எடப்பாடியார் தலைமையில் பௌர்ணமி ஆரம்பம். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும். அதற்கு கிளைக் கழகச் செயலாளர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறினார்.