ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா.... ஆபத்தான கூட்டணிக்கு உலக நாடுகள் கண்டனம்!
வடகொரியா ரஷ்யாவுக்கு ராணுவ உதவி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை இணைத்துக்கொள்ள முடிவு செய்தது உக்ரைன். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷ்யா, கடந்த 2022ம் ஆண்டு உக்ரைன் மீது போர் தொடுத்தது. அப்போது முதல் முடிவில்லாமல் தொடரும் இந்த போரினால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. அதேபோல், ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனாலும், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா அதிகரித்தபடி உள்ளது. இதனிடையே கடந்த சில தினங்களாக ரஷ்யா மீதான எதிர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது உக்ரைன். தொடர்ந்து நடைபெற்று வரும் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, சர்வதேச அளவில் பொருளாதார ரீதியான பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இந்த பதற்றமான சூழலில் வடகொரியா ரஷ்யாவுக்கு ராணுவ உதவி செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இதுகுறித்து பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “ரஷ்யாவுக்கு வடகொரியா தனது ராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் வழங்கி வருகிறது. இது போரை தீவிரப்படுத்துமே தவிர ஒரு போதும் நிறுத்துவதற்கான வழியை ஏற்படுத்தாது. ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே உள்ள இந்த கூட்டணிக்கு கண்டனம் தெரிவித்துள்ள உலகத் தலைவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இந்த தீவிர அச்சுறுத்தல் பற்றி சர்வதேச நட்பு நாடுகள் ஒரு வெளிப்படையான பதிலை தர வேண்டும் என உக்ரைன் அரசு எதிர்பார்க்கிறது. இதற்கான சான்றுகளை செயற்கைக்கோள்கள் வழியேயும் மற்றும் ரஷியாவில் இருந்து வெளிவரும் வீடியோக்களை நாம் அனைவரும் காண முடியும். இதனால், போர் நீடிக்குமே தவிர, உலக அளவில் ஒருவருக்கும் பலன் ஏற்படாது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு நடுவே நடுக்கும் இந்த போரானது விரைவில் முடிவுக்க வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?