சவுதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவில் உள்ள மசூதியில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பாசிர் மற்றும் சித்தி அக்தர் ஆகிய இருவருக்கே இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மசூதிக்குள் வைத்து அவர்கள் முத்தமிட்டுக் கொண்டதாகச் சமூக வலைதளங்களில் கூறப்பட்டாலும், அவர்கள் என்ன குற்றம் செய்தனர், எப்பொழுது கைது செய்யப்பட்டார்கள், வழக்கு விசாரணை எவ்வாறு நடைபெற்றது என்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் சவுதி அரசு வழங்கவில்லை. அவர்கள் இருவரும் கணவன், மனைவியா அல்லது காதலர்களா என்று முழுமையான தகவல்கள் கூறப்படவில்லை.
வியன்னா ஒப்பந்த விதிகளின்படி கைதானவர்கள் மற்றும் தண்டனை விவரங்கள் குறித்து முன்கூட்டியே தூதரகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால், தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னரே வங்கதேச தூதரகத்திற்கு இந்நடவடிக்கை குறித்துச் சவுதி அரசு தகவல் தெரிவித்துள்ளது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவசரகதியில் இந்த ரகசிய மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதோடு, சவுதி தூதரிடம் விளக்கமும் கோரியுள்ளது.
வறுமையைப் போக்குவதற்காகச் சவுதி அரேபியாவுக்குப் பணிக்குச் சென்ற நஸ்ருல் இஸ்லாம் எந்தத் தவறும் செய்திருக்க மாட்டார் என்றும், அவருக்கு நியாயமான சட்ட உதவி கூட வழங்கப்படாமல் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். நஸ்ருலின் மரணச் செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் அவரது வயதான உறவினர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சோகமும் நிகழ்ந்துள்ளது.
அந்நாட்டின் 'தஃஸீர்' (Ta'zir) சட்டப்பிரிவின் கீழ் இந்த மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வியன்னா ஒப்பந்தத்தின்படி, வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டாலோ அல்லது தண்டனை விதிக்கப்பட்டாலோ சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால், வங்கதேச அரசுக்கு முன்அறிவிப்பு எதுவும் வழங்கப்படாமல் இந்த ரகசிய மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தூதரக ரீதியாக எவ்விதத் தகவலும் தெரிவிக்கப்படாதது குறித்து வங்கதேச வெளியுறவுத்துறை சவுதி தூதரிடம் விளக்கம் கேட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் கடந்த 2025-ல் மட்டும் 356 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. "இது நீதிக்கே நேர்ந்த பெரும் அவமானம்" என வங்கதேசத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
LIVE 24 X 7









