மனிதர்களால் 150 ஆண்டுகள் வாழ முடியும்.. ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை.

மனிதர்களால் 150 ஆண்டுகள் வாழ முடியும்..  ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை.

மனிதர்களின் ஆயுளை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும் என்ற நம்பிக்கையில் ரஷ்ய அதிபர் புதின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆராய்ச்சிகளை முன்னெடுத்துள்ளார். குரங்குகளிடம் முதுமை தொடர்பான ஆய்வுகள்,

Author: kazhugu k உலகம்

மனிதர்களால் 150 ஆண்டுகள் வாழ முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், அதற்கான அறிவியல் பூர்வமான ஆய்வுகளை முடுக்கி விட்டுள்ளார்.

சீன அதிபருடன் தனிப்பட்ட முறையில் உரையாடிக் கொண்டிருந்த ரஷ்ய அதிபர் புதின் தொடர்ச்சியான உறுப்பு மாற்று அறுவை சிக்ச்சைகள் மூலம் 150 ஆண்டுகள் வரை மனிதன் வாழ முடியும் என்று பேசியது எப்படியே கசிய, அது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல் புதின் ஏதோ சாதாரணமாக சொல்லி விட்டு சென்றார் என்று சொல்ல முடியாது. ஏன்னென்றால், அதற்கான முன்னெடுப்புகளை அவர் மிக தீவிரமாக எடுத்துள்ளார்.

இதுவே தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது. முதுமையைத் தடுக்கும் ஆராய்ச்சிகளுக்காகப் பல பில்லியன் டாலர்கள் செலவிலான தேசியத் திட்டங்களை புதின் வகுத்துள்ளார். ஒரு லட்சத்து 75 ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றுவதே இந்த திட்டத்தின் இலக்கு.

முதுமையைத் தடுத்து ஆரோக்கியமான ஆயுட்காலத்தை நீட்டிப்பதற்காக, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய சுகாதாரப் பாதுகாப்பு திட்டத்தை, 26 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ரஷ்ய அதிபர் புதின் செயல்படுத்தி வருகிறார்.

இதற்காக புதினின் நெருங்கிய ஆலோசகரான மிகைல் கோவல்சுக் தலைமையிலான ஆராய்ச்சி மையத்தில், 22 இனங்களைச் சேர்ந்த சுமார் 7,000 குரங்குகளிடம் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

வயதான குரங்குகளின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து, மூளை மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் முதுமை மாற்றங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த ஆய்வகத்தில் 3D பிரிண்டிங் மூலம் மனித திசுக்களை உருவாக்குவது மற்றும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடலில் மனித உறுப்புகளை வளர்ப்பது ஆகிய தொழில்நுட்பங்களில் ரஷ்ய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மரபணு சிகிச்சை செல்களின் வயதாகும் வேகத்தைக் குறைக்கும் என்று கூறப்படும் நிலையில், அதற்கான சிகிச்சை மருந்துகளை 2028 முதல் 2030-க்குள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிகளில் புதினின் மகளான நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் மரியா வோரோன்ட்சோவாவும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி மனிதர்கள் 150 ஆண்டுகள் வாழவதற்கான ஆய்வை பெரும் செலவில் ரஷ்ய அதிபர் புதின் மேற்கொண்டுள்ளது குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. இது சாத்திய படாது என்ற கருத்தே நிலவுகிறது.

குரங்குகளின் ரத்தம் மூலமாகவோ அல்லது தற்போதைய மருத்துவ முறைகள் மூலமாகவோ மனிதர்களின் ஆயுளை 150 ஆண்டுகள் நீட்டிக்க முடியும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே மனிதர்கள் நீண்ட காலம் வாழவேண்டும் என்ற ரஷ்ய அதிபர் ஆசை நிறைவேறுமா என்பது விஞ்ஞான ஆய்வுகளின் முடிவில் தெரிய வரும்.