உலகம்

தாத்தா.. பாட்டி வீட்டில் கைவரிசை.. பேத்திக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தனது தாத்தா மற்றும் பாட்டியின் வீட்டில் இருந்து பணத்தையும், தங்க வளையலையும் திருடிய இளம்பெண் ஒருவரை, அவருடைய தாத்தா, பாட்டியே காவல்துறையில் ஒப்படைத்துச் சிறைக்கு அனுப்பிய விசித்திரச் சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

தாத்தா.. பாட்டி வீட்டில் கைவரிசை.. பேத்திக்கு காத்திருந்த அதிர்ச்சி!
China GrandParents
சீனாவைச் சேர்ந்த சென் என்ற பெண், தனது தாத்தா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தைப் பயன்படுத்தி அங்கிருந்த 20,000 யுவான் (சுமார் ரூ.2.8 லட்சம்) ரொக்கம் மற்றும் ஒரு தங்க வளையலைத் திருடியுள்ளார். பின்னர் அந்தத் தங்க வளையலை 27,000 யுவானுக்கு (சுமார் ரூ.3.8 லட்சம்) விற்று, அந்தப் பணத்தையும் முழுமையாகச் செலவழித்துள்ளார்.

இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, சென் தனக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என வாதாடினார். "நான் எடுத்தது எனது தாத்தா, பாட்டியின் பணம்தான். சொந்தக் குடும்பத்து ஆள் என்பதால் அவர்கள் என்னை மன்னித்து விடுவார்கள், வழக்கை பெரிதுபடுத்த மாட்டார்கள். இது எங்கள் குடும்பத்திற்குள்ளான சொந்த விஷயம்" என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால், சென் ஏற்கனவே பலமுறை வீட்டில் இருந்த விலைமதிப்பற்ற பொருட்களைத் திருடியிருப்பதாக அவரது தாத்தா, பாட்டி தெரிவித்தனர். உழைக்காமல் வாழ நினைக்கும் சோம்பேறியாகச் சென் இருப்பதாகவும், ஒவ்வொரு முறையும் திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றதாகவும் அவர்கள் கூறினர். பலமுறை எச்சரித்து மன்னித்த போதிலும் அவர் திருந்தாததால், சட்டரீதியான நடவடிக்கை மூலம் மட்டுமே அவருக்குப் பாடம் புகட்ட முடியும் எனக் கருதி புகாரைத் திரும்பப் பெற அவர்கள் மறுத்துவிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேத்தி சென்னுக்குத் திருட்டுச் குற்றத்திற்காக 6 மாத சிறைத்தண்டனையும், 2,000 யுவான் (ரூ.28,000) அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.