தமிழ்நாடு

₹1,000 கோடி மின்சார பஸ் டெண்டருக்கு பிரேக்... திமுக ஆட்சியின் திட்டத்தை ரத்து செய்த த.வெ.க அரசு!

தமிழகத்தில் 500 மின்சார பஸ்களை இயக்குவதற்காக முந்தைய திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டிருந்த ரூ.1,000 கோடி மதிப்பிலான டெண்டரை, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ரத்து செய்துள்ளது.

₹1,000 கோடி மின்சார பஸ் டெண்டருக்கு பிரேக்... திமுக ஆட்சியின் திட்டத்தை ரத்து செய்த த.வெ.க அரசு!
முந்தைய ஆட்சியில் வெளியிடப்பட்ட டெண்டர்கள் மற்றும் நிர்வாக அனுமதிகளை ஆய்வு செய்து வரும் த.வெ.க அரசு, பல்வேறு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்களை ஏற்கனவே ரத்து செய்துள்ளது. அந்த வரிசையில், ஜெர்மனி வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 500 மின்சார பஸ்கள் திட்டத்துக்கான டெண்டரும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் 320 பஸ்கள், மதுரையில் 100 பஸ்கள், கோவையில் 80 பஸ்கள் இயக்கப்படவிருந்தன. இதற்கான பஸ்கள் வாங்கும் செலவு மட்டும் ரூ.1,000 கோடியாக மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், சார்ஜிங் நிலையங்கள், மின்சார கட்டமைப்பு உள்ளிட்ட செலவுகள் தனியாக இருந்தன.

இந்த டெண்டரில் அசோக் லேலண்ட் மற்றும் ஜேபிஎம் நிறுவனங்கள் போட்டியிட்டிருந்தன. டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் மின்சார பஸ்களை இயக்கி வரும் ஜேபிஎம் நிறுவனம் குறைந்த தொகையை மேற்கோள் காட்டியிருந்தது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் அரசுக்கு நீண்டகால நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடும் என அதிகாரிகள் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, டெண்டரை ரத்து செய்ய அரசு முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "மின்சார பஸ்களை வாங்குதல், கண்டக்டர்களை நியமித்தல், பராமரிப்பு செலவுகளை ஏற்றுக்கொள்வது உள்ளிட்டவற்றுக்கு போதிய நிதி வசதி இல்லை. எனவே தனியார் நிறுவனங்களே பஸ்களை வாங்கி, இயக்கி, பராமரிக்கும் வகையில், அரசு ஒரு கிலோமீட்டருக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே செலுத்தும் புதிய ஒப்பந்த முறைக்கு மாற அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்" என்றனர்.

இதற்கு முன்பாக, ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கோவில் கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக அனுமதிகளையும் தமிழக அரசு ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைகள், முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை மறுஆய்வு செய்யும் அரசின் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.