தமிழ்நாடு

தமிழ்நாடு மின்துறைக்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன்... பரபரப்பை கிளப்பிய வெள்ளை அறிக்கை !

தமிழ்நாடு மின்துறையின் தற்போதைய நிதிநிலை குறித்து விரிவான வெள்ளை அறிக்கையை மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டுள்ளார். சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், மின்வாரியத்தின் வருவாய், செலவினம், உள்கட்டமைப்பு, மனிதவள நிலை மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு மின்துறைக்கு ரூ.2.47 லட்சம் கோடி கடன்... பரபரப்பை கிளப்பிய வெள்ளை அறிக்கை !
அறிக்கையின்படி, தமிழ்நாடு மின்துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2.47 லட்சம் கோடி கடன் சுமை உள்ளது. தற்போது மின்துறையின் நிதிப் பற்றாக்குறை ரூ.34,447 கோடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்துறையில் மொத்தம் 65,921 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 9,136 பேர் ஓய்வு பெற்ற நிலையில் வெறும் 343 பேர் மட்டுமே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதனால் கடுமையான பணியாளர் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், ஒரு ஊழியர் பலரின் பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 2021 முதல் 2026 வரை மின்துறையின் கடன் ரூ.87,399 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது காலியாக உள்ள 20,449 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மின்சார தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப உற்பத்தி மற்றும் விநியோக கட்டமைப்புகள் மேம்படுத்தப்படவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் தற்போது 1,910 துணை மின் நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் 122 நிலையங்கள் மட்டுமே புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இதை மாற்றும் வகையில் ரூ.9,000 கோடி செலவில் 238 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின் வாரிய ஊழியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. 2000-ஆம் ஆண்டில் 99,481 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 76,174 ஆக குறைந்துள்ளது. மேலும், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பல மின் திட்டங்களை நிறைவு செய்ய ரூ.8,000 கோடி தேவைப்படுவதாகவும், உப்பூர் மின் நிலையத் திட்டம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு குறித்த புகார்கள் எழுந்து வரும் சூழலில், மின்துறையின் நிதிநிலை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கை அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.