தமிழ்நாடு

கோயில் அறங்காவலர் தேர்வுக்குழு: ‘GOAT’ படத் தயாரிப்பாளருக்கு இடம்!

திருக்கோயில்களின் அறங்காவலர் நியமனக் குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இடம்பெற்றுள்ளார்.

கோயில் அறங்காவலர் தேர்வுக்குழு: ‘GOAT’ படத் தயாரிப்பாளருக்கு இடம்!
Archana Kalpathi
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட கோயில்களுக்கு மரபுசாரா அறங்காவலர்களைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட மாநில அளவிலான குழுவில், பிரபலத் திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வருபவர் அர்ச்சனா கல்பாத்தி. இவரது தயாரிப்பில் நடிகரும், தற்போதைய தமிழக முதலமைச்சருமான விஜய் நடித்த ‘பிகில்’ மற்றும் ‘கோட்’ (GOAT) ஆகிய திரைப்படங்கள் வெளியானது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் ஆட்சி நிர்வாகத்தின் கீழ், அர்ச்சனா கல்பாத்திக்கு இந்த முக்கிய அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ள திருக்கோயில்களுக்குப் பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிக்கத் தகுதியான விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து பட்டியலை அளிப்பதற்காக இந்த மாநிலக் குழுவை அமைத்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகளும், துணைத் தலைவராக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கே.ராமநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர்களாகத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரம், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ப.ரா.சம்பத், மா.சுமதி (எ) சுமதிஸ்ரீ, த.வேல்முருகன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இக்குழுவின் பதவி வழி உறுப்பினராகவும் செயலாளராகவும் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.