தமிழ்நாடு

ஜெம் வீரமணி வழக்கு.. இரு ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

திமுக ஆட்சியில் சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஜெம் வீரமணி வழக்கு.. இரு ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
Waiting List
தமிழ்நாடு காவல் துறையில் இரு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான அருண் மற்றும் கண்ணன் ஆகியோரை திடீரெனக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை காவல் துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியாற்றி வந்த அருண் ஐபிஎஸ், தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்த அருண், நியமிக்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே கடந்த ஜூலை மாதம் சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அந்தப் பொறுப்பிற்கு வந்த இரண்டு மாதங்களுக்குள் அவர் மீண்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, கோவை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த கண்ணன் ஐபிஎஸ் அதிகாரியும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணி விவகாரத்தில், தொடக்கத்தில் கண்ணனிடம் தான் புகார் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. கடந்த 2024-ஆம் ஆண்டிலேயே அப்போதைய கூடுதல் ஆணையராக இருந்த கண்ணனிடம் ஆதார வீடியோவைச் சமர்ப்பித்துப் புகார் அளித்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனச் சமீபத்தில் காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தச் சூழலில், சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் மற்றும் தற்போதைய கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஆகிய இரு உயரதிகாரிகளையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.