தமிழ்நாடு

மின்வாரிய தலைமையகத்தில் திருட்டு: 18 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்; தனிப்படை விசாரணை!

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில், டெண்டர் மற்றும் கொள்முதல் தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கிய குறைந்தது 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்வாரிய தலைமையகத்தில் திருட்டு: 18 ஹார்டு டிஸ்க்குகள் மாயம்; தனிப்படை விசாரணை!
TN EB
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில், டெண்டர் மற்றும் கொள்முதல் தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கிய குறைந்தது 18 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்வாரிய தலைமையகத்தின் 4, 5, 7 மற்றும் 10 ஆகிய தளங்களில் உள்ள அலுவலகக் கணினிகளில் இருந்து முக்கிய ரகசியத் தரவுகள் அடங்கிய ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன. குறிப்பாக, நிலக்கரி கொள்முதல் தொடர்பான டிஜிட்டல் தரவுகளே திருடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். கடந்த மே மாதம் 16 மற்றும் 17 ஆகிய வார இறுதி நாட்களில், குறைந்த அளவிலான பணியாளர்கள் இருந்த சூழலைப் பயன்படுத்தி இந்தத் திருட்டு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மே 20-ஆம் தேதி கோப்புகள் காணாமல் போனதைக் கண்டறிந்த கணினி நிர்வாகிகள் ஆய்வு செய்தபோதுதான், ஹார்டு டிஸ்க்குகள் அகற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுவரை 8 ஹார்டு டிஸ்க்குகள் தொடர்பாக மட்டுமே துறை ரீதியாகப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்ட சிசிடிவி கேமராக்கள்

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மின்வாரியத்தின் முக்கியப் பிரிவுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டு, மீண்டும் பொருத்தப்படாமல் இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. கொள்முதல் மற்றும் ஒப்பந்த முறைகேடுகளில் தொடர்புடைய தரகர்களின் வருகை பதிவாகாமல் இருக்கவே திட்டமிட்டு கேமராக்கள் அகற்றப்பட்டதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

போலீஸ் விசாரணையும் சிபிஐ பின்னணியும்

இத்திருட்டு சம்பவம் தொடர்பாக மின்வாரிய நிர்வாகப்பிரிவு அதிகாரி அளித்த புகாரின் பேரில், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருவல்லிக்கேணி துணை காவல் ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸாரும், மின்வாரிய ஊழல் தடுப்புப் பிரிவினரும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கடந்த வாரம் தான், ரூ.397 கோடி மதிப்பிலான மின்மாற்றி கொள்முதல் ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இத்தகைய சூழலில், முறைகேடுகள் குறித்த பல்வேறு விசாரணைகள் நடந்து வரும் வேளையிலேயே இந்த டிஜிட்டல் ஆவணங்கள் திருடப்பட்டிருப்பது மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.