தமிழ்நாடு

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜெம் வீரமணி உள்ளிட்ட மூன்று பேரை மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்கச் சென்னை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: மீண்டும் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
Gem Veeramani

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி மற்றும் வழக்கில் தொடர்புடைய இருவரை மீண்டும் காவல் காவலில் எடுத்து விசாரிக்கச் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி, அவருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இவ்வழக்கில் ஏற்கனவே சில நாட்கள் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்திருந்தனர். தொடர்ந்து, உதவியாளர் கணேசனை 3 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கிடையே, இவ்வ வழக்கில் தொடர்புடைய பணப்பரிவர்த்தனை விவரங்கள் குறித்துத் துப்பு துலக்கும் வகையில், ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரை மீண்டும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்புப் புலனாய்வுக் குழு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா, குற்றம் சாட்டப்பட்ட ஜெம் வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய 3 பேரையும் மீண்டும் 2 நாட்கள் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், கணேசன் உள்ளிட்ட 4 பேரையும் வரும் திங்கட்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.