சென்னையில் எத்தனை லட்சம் வாக்காளர்கள்?
சென்னையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 14.04 லட்சம் ஆண் வாக்காளர்களும், 15.09 லட்சம் பெண் வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர, மூன்றாம் பாலின வாக்காளர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
குறிப்பாக, 18 முதல் 19 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை 46,200 ஆக உள்ளது. அதேபோல், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் 28,159 பேர் உள்ளனர்.
இதன் மூலம் சென்னையில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
SIR திருத்தத்தால் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள்!
கடந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெயர்கள் இடம்பெற்றிருந்தவர்கள், நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
இந்தச் சரிபார்ப்பின் முடிவில் சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, குஜராத், கேரளா, கோவா, லட்சத்தீவு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாட்டிலும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்தப் பணிகள் நடைபெற்றன. கடந்த மார்ச் 15, 2026 நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 5 கோடியே 69 லட்சத்து 17 ஆயிரத்து 979 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 2.78 கோடி ஆண் வாக்காளர்களும், 2.90 கோடி பெண் வாக்காளர்களும், 7,656 மூன்றாம் பாலின வாக்காளர்களும் அடங்குவர்.
SIR-க்கு பிறகு 84 ஆயிரம் பேர் புதிதாக சேர்ப்பு!
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் (SSR) தொடங்கப்பட்டுள்ளன.
இதன்படி, 2027 ஜனவரி 1-ம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, புதிய வாக்குச்சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக தற்போது தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் SIR திருத்தத்திற்குப் பிறகு சுமார் 84 ஆயிரம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 29,14,908 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளிடையே இந்த விவகாரம் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









