தமிழ்நாட்டில் 2027-2028-ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ள ஷூ, சாக்ஸ், மழைக்கோட் மற்றும் ஸ்வெட்டர் ஆகியவற்றைக் கொள்முதல் செய்வதற்காக ஒரே நாளில் 4 டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.52 கோடியே 5 லட்சம் மதிப்பில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (TNTB&ESC) சார்பில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஷூ வழங்குவதற்காக ரூ.37 கோடியே 24 லட்சம் மதிப்பில் முதல் டெண்டரும், அதனுடன் வழங்கப்படும் சாக்ஸ்களுக்காக ரூ.9 கோடியே 7 லட்சம் மதிப்பில் இரண்டாவது டெண்டரும் கோரப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மழைக்காலங்களில் சிரமமின்றி பள்ளிக்குச் சென்று வருவதற்கு ஏதுவாக, ரூ.3 கோடியே 32 லட்சம் மதிப்பில் 91 ஆயிரத்து 771 மழைக்கோட்டுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. 'செர்ரி ரெட்' (Cherry Red) நிறத்தில் தயாரிக்கப்பட உள்ள இந்த மழைக்கோட்டுகள் 28, 30, 32 மற்றும் 34 இன்ச் அளவுகளில் வழங்கப்படும்.
மேலும், குளிர் அதிகமாக நிலவும் மலைப்பகுதி மாணவர்களின் நலன் கருதி கம்பளி ஸ்வெட்டர்கள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2 கோடியே 42 லட்சம் மதிப்பில் நான்காவது டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை (வால்பாறை), திண்டுக்கல் (கொடைக்கானல்), சேலம் (ஏற்காடு), நாமக்கல் (கொல்லிமலை), ஈரோடு, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தேனி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த மழைக்கோட்டுகள் மற்றும் ஸ்வெட்டர்கள் வழங்கப்பட உள்ளன.
அடுத்த கல்வியாண்டு தொடங்கும்போதே மாணவர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் எவ்விதத் தாமதமுமின்றி உரிய நேரத்தில் வழங்குவதற்கான முன்னேற்பாடாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
LIVE 24 X 7









