பிஸ்லெரி வாட்டர் குடித்தால் புற்றுநோய் வருமா? குடிநீர் ஆய்வில் அதிர்ச்சி...FSSAI போட்ட அதிரடி உத்தரவு!

பிஸ்லெரி வாட்டர் குடித்தால் புற்றுநோய் வருமா? குடிநீர் ஆய்வில் அதிர்ச்சி...FSSAI போட்ட அதிரடி உத்தரவு!

பிரபலமான குடிநீர் பிராண்டான பிஸ்லெரி நிறுவனத்திற்கு எதிராக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வழக்கு நடவடிக்கை தொடர்ந்துள்ளது.

Author: Bhavani v தமிழ்நாடு

இந்தியாவின் பிரபலமான குடிநீர் பிராண்டான பிஸ்லெரி நிறுவனத்துக்கு எதிராக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளது. அந்நிறுவனத்தின் குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில், நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி புரோமேட் (Bromate) இருப்பதும், பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) கண்டறியப்பட்டதும் இதற்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாகப் பல்வேறு உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் FSSAI, பிஸ்லெரி நிறுவனத்துக்கு எதிராகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சில நிறுவனங்களின் தயாரிப்புகளைத் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளதுடன், உரிமங்கள் ரத்து செய்யப்பட்டும், வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டும் வருகிறது.

பிஸ்லெரி குடிநீரில் என்ன பிரச்சினை?

பிஸ்லெரி நிறுவனத்தின் தயாரிப்பு நிலையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அதில் புரோமேட் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் இல்லை என்பது முதற்கட்ட ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் கீழ் அந்தக் குடிநீர் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, குடிநீர் மாதிரி மேல்முறையீட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது ஆய்விலும் குடிநீர் பாதுகாப்பற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், அதில் பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு எதிராக உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக FSSAI தெரிவித்துள்ளது.

புரோமேட் மற்றும் PAHs ஆகியவை புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்துடன் தொடர்புடைய வேதிப்பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, குடிநீர் மாதிரியில் இவை கண்டறியப்பட்டிருப்பது உணவுப் பாதுகாப்பு தொடர்பான கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சாக்லேட் குக்கீஸ்களுக்கும் திரும்பப் பெற உத்தரவு!

இதற்கிடையே, ஆஷா கன்ஃபெக்ஷனரி (Asha Confectionery) நிறுவனத்தின் சாக்லேட் நிரப்பப்பட்ட குக்கீஸ்களையும் சந்தையில் இருந்து திரும்பப் பெற FSSAI உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குக்கீஸ்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், லேபிளில் குறிப்பிடப்படாத கார்மோசின் (Carmoisine) என்ற நிறமூட்டி பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. மேலும், அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவை விட அதிகமாக டார்ட்ரசின் (Tartrazine) நிறமூட்டி இருந்ததும் தெரியவந்தது.

அத்துடன், குறிப்பிட்ட உணவு வகையில் பயன்படுத்த அனுமதி இல்லாத சன்செட் யெல்லோ FCF (Sunset Yellow FCF) என்ற நிறமூட்டியும் அந்தக் குக்கீஸ்களில் கண்டறியப்பட்டது.

இதன் காரணமாக, அந்தத் தயாரிப்பு தவறான லேபிள் கொண்டது, தரமற்றது மற்றும் பாதுகாப்பற்றது என உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் FSSAI வகைப்படுத்தியுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட தயாரிப்புத் தொகுதி முழுவதையும் சந்தையில் இருந்து உடனடியாகத் திரும்பப் பெறுமாறு ஆஷா கன்ஃபெக்ஷனரி நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிஸ்லெரி குடிநீர் மற்றும் ஆஷா நிறுவனத்தின் குக்கீஸ்கள் தொடர்பான இந்த நடவடிக்கைகள், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.